ஆந்திரப்பிரதேசத்தில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லபட்டதைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக, தமிழ்த் தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் கைது! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் கண்டனம்!
ஆந்திரப்பிரதேசத்தில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியதற்காக தமிழ்த் தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் அவர்களை கைது செய்துள்ளார்கள்.
ஆந்திரப் பிரதேசத்தில் இருபது தமிழர்கள் அம்மாநில காவல்துறையினராலும் வனத்துறையினராலும் கடத்தப்பட்டு – சித்திரவதை செய்யப்பட்டு, பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களோடு கடத்தப்பட்ட மற்றத் தமிழர்களின் கதி என்ன என்பது, கேள்விக்குறியாக உள்ளது.
இந்தப் படுகொலையை இந்திய மனித உரிமை ஆணையமும் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றமும் வன்மையாகக் கண்டித்து, தாங்களாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆனால், தமிழக முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களோ, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களோ இந்த இனப்படுகொலையை கண்டனம் செய்யாமலும் ஆந்திரக் காவல்துறை மற்றும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க உரிய முயற்சிகளோ எடுக்காமலும், ஒப்புக்கு அறிக்கைவிட்டு, ஒதுங்கிக் கொண்டார்கள். இந்திய அரசின் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களோ, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களோ இந்த மனிதப் படுகொலையைக் கண்டிக்கவில்லை.
இந்நிலையில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் “இந்தியாவை நம்பினோம் ஆனாதை ஆனோம், திராவிடத்தை ஏற்றோம் ஏமாளி ஆனோம், தமிழ்த்தேசியமே தற்காப்பு ஆயுதம்” என்ற வரிகளைக் கொண்ட சுவரொட்டிகள், தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டன.
இன்று (23.04.2015), தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் அவர்களை, இந்தியத் தண்டனைச் சட்டம் 153(A), r/w 3 of TNOPPD Act, இனங்களுக்கிடையே பகை மூட்டுதல், தனியார் சொத்துக்கு சேதம் உண்டாக்குதல் ஆகிய பிணை மறுப்புப் பிரிவின்கீழ், கைது செய்து, சிறையில் அடைத்துள்ளார்கள்.
தமிழக அரசின் இந்நடவடிக்கை, இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் கருத்துரிமையைப் பறிப்பதாகவும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் உள்ளது.
தமிழக அரசின், இந்த சனநாயக விரோத மற்றும் தமிழின விரோதப் போக்கை, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் சுவரொட்டி ஒட்டியதற்காக தோழர்களை கைது செய்ய உள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டுமென்றும் தோழர் கவித்துவன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்
-http://www.pathivu.com


























அம்மாமீண்டும் அரியாசனத்தில் அமர வேண்டும் என்று கோயில் கோயிலாக பால் அபிசேகமும் ,மண்சோறு தின்றும் காவடி தூக்கும் இந்த தமிழக மக்கள் ,20 அப்பாவிதமிழர்களை சுட்டுக்கொன்றவர்கள் மீது எந்த எதிர்ப்பும் தெருவிப்ப்பதர்க்கும் முன்வரவில்லைஇப்படி உணர்ச்சியற்று ஒற்றுமைஇல்லமல் அறியாமையால் உலண்ருக்கொண்டுள்ள மக்கள் உள்ளவரை தமிழனை கடவுள் கூட காப்பாற்ற மாட்டார் !