சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க மீனவ குழுவினர் தில்லி பயணம்

sushma-swaraj_1தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கருதி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை திங்கள்கிழமை (ஏப்.27) சந்தித்து முறையிடுவதற்காக, தமிழக மீனவர்கள் குழு வெள்ளிக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றது.

கச்சத்தீவு, தனுஷ்கோடி பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் ராமேசுவரம் பகுதி மீனவர்கள், இலங்கை கடற்படை, இலங்கை மீனவர்களிடம் சிக்கி வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது உள்ள 45 நாள்கள் மீன்பிடி தடைக் காலம் முடிந்து அந்தப் பகுதியில் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் மீன்பிடித்தொழில் செய்வதற்கும், மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காகவும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்க உள்ளனர். இதற்காக, தமிழக பகுதியில் இருந்து 13 மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள், காரைக்கால் பகுதி மீனவ பிரதிநிதிகள் உள்பட 120 மீனவர்கள் கொண்ட குழுவினர் வெள்ளிக்கிழமை சென்னை புறப்பட்டுச் சென்றனர்.

இந்தக் குழுவினர், சென்னையில் இருந்து ரயில் மூலம் சனிக்கிழமை தில்லி புறப்பட்டு செல்கின்றனர். இவர்கள் திங்கள்கிழமை (ஏப்.27) அமைச்சர் சுஷ்மாவை சந்திக்க உள்ளனர்.

-http://www.dinamani.com

TAGS: