காவிரியில் அனுமதியின்றி கர்நாடகம் அணை கட்டக் கூடாது: பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தல்

  • தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

    தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தமிழகத்தின் அனுமதியைப் பெறாமல் புதிய அணை உள்பட எந்தத் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடக அரசை அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் வலியுறுத்தினார்.

தில்லியில் மத்திய கொள்கைக் குழுவின் (நீதி ஆயோக்) திறன் மேம்பாட்டுக்கான மாநில முதல்வர்கள் அடங்கிய துணைக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தில்லி வந்தார். பின்னர், சனிக்கிழமை காலையில் முதல்வர்களின் துணைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், மாலையில் பிரதமர் நரேந்திர மோடியை ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அப்போது, காவிரி நதியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் கர்நாடக அரசு கட்ட உத்தேசித்துள்ள புதிய தடுப்பணைத் திட்டம் தொடர்பாக பிரதமரிடம் பன்னீர்செல்வம் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2007ஆம் ஆண்டு பிப்ரவரி 5-இல் காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பு மத்திய அரசிதழில் 2013, பிப்ரவரி 19-இல் வெளியிடப்பட்டதை மதித்துச் செயல்படும்படி எங்கள் தலைவர் ஜெயலலிதா பலமுறை கேட்டுக் கொண்ட பிறகும் காவிரியின் மேக்கேதாட்டுப் பகுதியில் புதிய தடுப்பணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு முன்னெடுத்துச் செல்கிறது.

இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு டிசம்பர் 5, கடந்த மார்ச் 27 ஆகிய நாள்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவை தொடர்பாக உங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் மீது சம்பந்தப்பட்ட மத்திய அரசுத் துறைகள் நடவடிக்கை எடுக்கவில்லை. நடுவர் மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவையும் மத்திய அரசு இதுவரை நியமிக்கவில்லை.

இந்நிலையில், குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதாகக் கூறிக் கொண்டு காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் தடுப்பணைகள் கட்டும் திட்டத்தை கர்நாடகம் செயல்படுத்தி வருவதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும், குடிநீர்த் தேவைக்காக கட்டப்படும் புதிய அணைக்கு மத்திய அரசின் அனுமதியை கர்நாடகம் பெறத் தேவையில்லை என கர்நாடகத்தைச் சேர்ந்த சில அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்து குறித்தும் ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இத்தகைய செயல்பாடு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரானதாகும்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்தும், அதில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவைத் தெளிவுபடுத்தக் கோரியும் கர்நாடகம் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், மேக்கேதாட்டு பகுதியில் இரண்டு புதிய தடுப்பணைகள் கட்டுவது தொடர்பான தொழில்நுட்ப ஆய்வை நடத்த கர்நாடகம் மேற்கொண்ட நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், காவிரியின் குறுக்கே குடிநீர்த் தேவைக்கான திட்டம் என்ற பெயரில் நீர்ப்பாசனத் திட்டங்கள், நீர் மின் திட்டங்கள், தடுப்பணைகள் திட்டம் போன்றவற்றை தன்னிச்சையாக கர்நாடக அரசு செயல்படுத்தினால், தமிழகத்துக்குக் காவிரியில் இருந்து வரும் நீர்வரத்து கடுமையாகப் பாதிக்கப்படும்.

இத்தகைய சூழலில், தனிப்பட்ட அளவில் இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட்டு, மேக்கேதாட்டு பகுதியில் சட்டவிரோதமாக எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்று கர்நாடகத்துக்கு அறிவுறுத்த வேண்டும். இந்த விஷயத்தில் தமிழகத்தின் அனுமதியையும், காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதலைப் பெறாமலும் எந்தத் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என கர்நாடகத்தை கடுமையான முறையில் அறிவுறுத்த வேண்டும்.

எங்கள் தலைவர் ஜெயலலிதாவின் நீண்ட நாள் கோரிக்கையான, காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவையும் தாமதமின்றி அமைக்க மத்திய நீர் வளத் துறை அமைச்சத்துக்கும் உத்தரவிட வேண்டும் என அந்தக் கடிதத்தில் பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை திரும்பினார்: பிரதமரின் சந்திப்பைத் தொடர்ந்து தில்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழக அரசு விருந்தினர் இல்லத்தில் சில மணி நேரம் ஓய்வு எடுத்த பன்னீர்செல்வம், சனிக்கிழமை இரவு விமானம் மூலம் சென்னை புறப்பட்டார்.

-http://www.dinamani.com

TAGS: