ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராவது நடக்குமா?

unnnபுதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திர அணுகுமுறையால், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தர உறுப்பினராவது என்ற, இந்தியாவின் நீண்ட கால கனவு, விரைவில் நிறைவேறும் சூழல் உருவாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு, மே மாதம் பதவியேற்றார். அதன்பின், 11 மாதங்களில், 16 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சமீபத்தில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா என, மூன்று நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் செய்தார்.

அன்னிய முதலீடு:

மோடியின் இந்த வெளிநாட்டுப் பயணங்களில், அந்த நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பது, அன்னிய முதலீடுகளை ஈர்த்து, உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்துவது, இந்திய அணுமின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருட்கள் கிடைக்கச் செய்வது போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதற்கேற்ற வகையில், ஒவ்வொரு நாடுகளின் தலைவர்களுடனும், மோடி பேச்சு நடத்தினார். அதேநேரத்தில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், நிரந்தர உறுப்பினராக வேண்டும் என்ற, இந்தியாவின் நீண்ட நாள் ஆசை மற்றும் முயற்சிக்கு ஆதரவு தர வேண்டும் என்றும், தான் பயணம் மேற்கொண்ட நாடுகளின் தலைவர்களைக் கேட்டுக் கொண்டார். வெளிநாட்டு தலைவர்களுடனான அனைத்து சந்திப்பின் போதும், இந்த விஷயத்தை வலியுறுத்த, மோடி தவறவில்லை. அதேபோல், இந்தியா வந்த உலகத் தலைவர்கள் மற்றும் தன்னைச் சந்தித்த அன்னிய நாடுகளின் தூதர்களிடமும், இந்த விஷயத்தை எடுத்துக் கூறினார். இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு தர வேண்டும் என, வலியுறுத்தினார்.

மோடியின், இத்தகைய நடவடிக்கைகளின் பலனாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பினராக, அமெரிக்கா, ரஷ்யா, வியட்னாம், ஜப்பான் உட்பட, பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மோடியின் பிரான்ஸ் விஜயத்தின்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ‘இந்தியாவை உடனடியாக, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின், நிரந்தர உறுப்பினராக இணைக்க வேண்டும்’ என, தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், பிரான்சும் தன் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது. இது, ஒருபுறம் இருக்க, மோடி அடுத்து மேற்கொள்ள உள்ள, சீனா, ரஷ்யா, தென்கொரியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளின் பயணமும், இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு வலு சேர்க்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

70வது ஆண்டு விழா:

அந்த நாடுகளின் தலைவர்களுடன் நடத்த உள்ள பேச்சின் போதும், இந்த விஷயத்தை வலியுறுத்தி, மோடி ஆதரவு கேட்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், ஐ.நா.,வின், 70வது ஆண்டு விழா, அக்டோபரில் கொண்டாடப்படும் போது, பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம் பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளதாக, நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

5 நாடுகளுக்கே ‘வீட்டோ’ அதிகாரம்:

* ஐக்கிய நாடுகள் சபை, 1945ல், 193 உறுப்பு நாடுகளுடன் உருவாக்கப்பட்டது.

* ஐ.நா., சபையில், சக்தி மிக்க அமைப்பு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில்.

* இக்குழுவில், 15 உறுப்பு நாடுகள் உள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் என்ற, ஐந்து நாடுகள் மட்டுமே, நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன.

* வாக்கெடுப்பு மூலம், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை, இதர நாடுகள், இக்கவுன்சிலில் இடம் பெற்று வருகின்றன.

* ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றும் தீர்மானங்கள், ஐ.நா., உறுப்பு நாடுகளை கட்டுப்படுத்தும். ஆனால், ஐ.நா., தீர்மானங்கள் கட்டுப்படுத்தாது.

* ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், ஏழு முறை, தற்காலிக உறுப்பு நாடாக, இந்தியா அங்கம் வகித்துள்ளது.

* ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை, ‘வீட்டோ’ அதிகாரம் மூலம், ரத்து செய்யும் உரிமை, ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே உள்ளது.

* ஜமைக்காவின் ஐ.நா., பிரதிநிதி கோர்ட்னே ராட்ரே தலைமையிலான குழு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து, உறுப்பு நாடுகளிடம் கருத்து கேட்டுள்ளது.

* மே மாதத்திற்கு பிறகு, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் தற்காலிக உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு தீர்வு காணப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

* கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், ஜப்பான், பிரேசில், ஜெர்மனி ஆகியவற்றுடன் இணைந்து, ‘ஜி 4’ நாடுகள் என்ற பெயரில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தத்திற்கு, இந்தியா குரல் கொடுத்தது. இதற்கு இத்தாலி, இந்தோனேசியா, மெக்சிகோ நாடுகள், எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, அந்தப் பிரசாரம் கைவிடப்பட்டது.

* தற்போது, இந்தியா தனித்து நின்று, உலக நாடுகளின் ஆதரவை கேட்டு வருகிறது.

* உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாகவும், மக்கள் தொகையில் இரண்டாவதாகவும் உள்ள இந்தியா, பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும், ஐ.நா., அமைதிப் படைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் வழங்கி வருகிறது. இதனால், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், வீட்டோ அதிகாரத்துடன் கூடிய, நிரந்தர உறுப்பினராகும், அனைத்து தகுதியும் இந்தியாவுக்கு உள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், வலிமையான அமைப்பு. அதில், இந்தியா கண்டிப்பாக இடம் பெற வேண்டும். சர்வதேச அளவில், சம பலம் கொண்ட நாடாக இல்லாமல், இனி தலைமை தாங்கும் வல்லமை உள்ள நாடாக, இந்தியா மாற வேண்டும். இந்த கருத்தை, அனைத்து நாடுகளுக்கான இந்திய தூதர்களிடமும் தெரிவித்த, பிரதமர் மோடி, அதற்கேற்ற வகையில், செயல்படும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

-லலித் மான்சிங்,

வெளியுறவு துறை முன்னாள் செயலர்

-http://www.dinamalar.com

TAGS: