விவசாயிகளைக் கைவிட்ட மோடி அரசு: ராகுல் குற்றச்சாட்டு

  • மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியில் விவசாயிகளிடம்  குறைகளைக் கேட்கும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

    மகாராஷ்டிர மாநிலம், விதர்பா பகுதியில் விவசாயிகளிடம்  குறைகளைக் கேட்கும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.

நாட்டில் உள்ள ஏழை விவசாயிகளை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கைவிட்டுவிட்டது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநில விவசாயிகளைச் சந்திப்பதற்காக அந்த மாநிலத்துக்கு ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை சென்றார். அங்கு இரண்டு நாள்கள் நடைப்பயணம் மேற்கொண்டு அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

நடைப்பயணம்: இந்நிலையில், மழையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள மகாராஷ்டிர மாநிலத்துக்கு ராகுல் காந்தி வியாழக்கிழமை சென்றார். தனது நடைப்பயணத்தை கஞ்சி கிராமத்திலிருந்து அவர் தொடங்கினார்.

நடைப்பயணத்தின் ஒரு பகுதியாக, ஹிராப்பூர் கிராமத்தில் உள்ள கோயிலுக்குச் சென்று வழிபட்ட ராகுல், அங்கு அவரைக் காண்பதற்காக வந்திருந்த ஏராளமான விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டார்.

இதன் பின்னர் தொங்கலாபாதில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

மகாராஷ்டிரத்தில் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. விவசாயிகள் கஷ்டத்தில் இருக்கும் போது அவர்களுக்கு கைகொடுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், தற்போது மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விவசாயிகளை கைவிட்டுவிட்டது.

பெரு நிறுவன முதலாளிகளின் நலன் மீது மட்டுமே மத்திய அரசுக்கு அக்கறை உள்ளது. இந்த நிலைமை, விவசாய சமூகத்துக்கு உகந்தது அல்ல.

வாழ்வாதாரம் முழுவதும் பாதிக்கப்பட்ட விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளை “குற்றவாளிகள்’ என ஹரியாணாவில் ஆளும் பாஜக அரசின் விவசாயத் துறை அமைச்சர் விமர்சிக்கிறார்.

அதே நேரத்தில், நாட்டில் வெறும் மூன்று விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறி மத்திய வேளாண்துறை அமைச்சர் கவலை தெரிவிக்கிறார். இது, ஏற்கெனவே பாதிப்பில் உள்ள விவசாயிகளை மேலும் கஷ்டப்படுத்தும் வாசகங்கள்.

அதேபோல், விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மிகவும் குறைவாக உள்ளது. இதனை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராகுல் காந்தி.

ராகுலிடம் விவசாயிகள் புகார்: முன்னதாக, மகாராஷ்டிரத்தின் ஹிராப்பூர் கிராமத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தியிடம் காப்பீட்டு நிறுவனங்கள் குறித்து விவசாயிகள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தனர்.

சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்கள் மறுக்கின்றன; பயிரிடப்பட்டிருந்த நிலத்தின் ஒரு பகுதியை மட்டுமே சேத மாதிரியாக அந்நிறுவனங்கள் கணக்கிடுகின்றன. மாநிலத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே பயிர் இழப்பீடு வழங்கப்படுகிறது, கிராமப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை அவர்கள் கண்டுகொள்வதில்லை என்பது உள்ளிட்ட புகார்களை ராகுல் காந்தியிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.

அவர்கள் ஒவ்வொருவரிடமும் குறைகளைப் பொறுமையாக கேட்ட ராகுல், “விவசாயிகளின் பிரச்னைகள் நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கப்படும்’ என உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, சேதமடைந்த பயிர்களை ராகுல் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

-http://www.dinamani.com

TAGS: