மீனவர்கள் விவகாரம்: பொறுப்பை தட்டிக் கழிக்கிறது மத்திய அரசு

தமிழக மீனவர்களைக் காக்கும் பொறுப்பை மத்திய அரசு தட்டிக் கழிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகம், புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் பாஜக தலைவர்களுடன் தில்லி சென்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

அப்போது, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்கக் கூடாது என்றும், அவ்வாறு எல்லை தாண்டி மீன்பிடிக்கச் சென்றால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுஷ்மா சுவராஜ் எச்சரித்துள்ளார்.

எல்லை தாண்டி மீன்பிடிக்க வரும் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வோம் என இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார்.

இந்தச் சூழலில், சுஷ்மா சுவராஜும் தம்முடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையில் பேசியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் பரப்பு மிகவும் குறுகியது. ராமேசுவரம் பகுதியிலிருந்து 12 கடல் மைல் தொலைவில் சர்வதேசக் கடல் எல்லை வந்து விடும். ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால்தான் விசைப்படகுகள் மீன் பிடிக்க முடியும் என்பதால், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள்ளும், இலங்கை மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளும் அரிதிலும் அரிதாக நுழைவது தவிர்க்க முடியாதது.

கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்ட பிறகு தமிழக மீனவர்களின் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது.

இந்தச் சிக்கலான பிரச்னைக்கு பேச்சுவார்த்தை

மூலம்தான் தீர்வு காண முடியும். இதற்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும்.

அதை விடுத்து, எல்லை தாண்டி சென்று மீன் பிடித்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று எச்சரிக்கும் வகையில் பேசுவது சரியில்லை என்று அவர் கூறியுள்ளார்.

-http://www.dinamani.com

TAGS: