புதுடில்லி: ”வரும், 2017ம் ஆண்டுக்கு பின், இந்தியர்கள் யாரும், வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்க முடியாது. அந்த அளவிற்கு, கறுப்பு பணத்துக்கு எதிரான கடுமையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன,” என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
இந்தியாவில் முறைகேடாக சம்பாதித்த பணத்தை, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில், இந்தியர்கள் சிலர், பல ஆயிரம் கோடி ரூபாயை பதுக்கியுள்ளனர். மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்ததும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்கவும், எதிர்காலத்தில் கறுப்பு பண பதுக்கலை தடுக்கவும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது.
சிறப்பு புலனாய்வு குழு:
சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, கறுப்பு பணத்தை கண்டுபிடிப்பதற்கு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கறுப்பு பண பதுக்கலை தடுப்பது தொடர்பாக, ‘கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருமானங்கள் மற்றும் சொத்துகள் ( புதிய வரிவிதிப்பு) – 2015’ என்ற மசோதா, சமீபத்தில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்ட்டது. இந்த மசோதாவின்படி, வெளிநாட்டு வருமானம், அங்குள்ள சொத்துகள் குறித்து, முறையாக கணக்கு காட்டாதவர்களுக்கு, மூன்றில் இருந்து, 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அளிக்கப்படும்.
இந்நிலையில், டில்லியில் மத்திய அமலாக்கத் துறை சார்பில் நேற்று நடத்தப்பட்ட விழாவில், மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவருமான அருண் ஜெட்லி பேசியதாவது:கறுப்பு பண பதுக்கலை தடுக்கும் புதிய மசோதா, அடுத்த வாரம், பார்லிமென்டில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது, தற்போதே அதிரடி நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. கடந்த சில மாதங்களில் மட்டும் இது தொடர்பாக, 121 வழக்குகளில் வரித்துறை அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்; மேலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடுமையான விதிமுறை:
எதிர்காலத்தில் கறுப்பு பணம் பதுக்கல் என்பது, மிகவும் சிக்கலான காரியமாகி விடும். வெளிநாடுகளில் கறுப்பு பணம் பதுக்கப்படுவதை முற்றிலும் ஒழிக்கும் வகையில், சர்வதேச நாடுகள், குறிப்பாக, ‘ஜி – 20’ அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் கடுமையான விதிமுறைகளை உருவாக்கியுள்ளன. இதன்படி, வெளிநாடு களில் நடக்கும் எந்தவிதமான பணப் பரிமாற்றங்களும், தானாகவே, சம்பந்தப்பட்ட நாட்டு அரசால், பகிரங்கமாக தெரிவிக்கப்பட்டு விடும். அனைத்து நாடுகளும் இதற்கு ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்து உள்ளன. எனவே, வரும், 2017ம் ஆண்டில் இருந்து, வெளிநாடுகளில் சட்டத்துக்கு புறம்பாக சொத்துகள் வாங்கி குவிப்பதோ, அங்குள்ள வங்கிகளில் சட்டவிரோதமாக பணத்தை பதுக்குவதோ, அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது. கடுமையான சட்டங்கள் அமலுக்கு வருவதால், சட்ட விரோதமாக பணத்தை பதுக்கும் நடைமுறையை கைவிட வேண்டும். இதனால், கடுமையான தண்டனை, நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கலாம். கறுப்பு பணம் அடியோடு ஒழிக்கப்பட்டால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
10 சதவீத வளர்ச்சி:
பொருளாதார வளர்ச்சி குறித்து, அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:முதலீட்டை ஊக்குவிப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரி விதிப்பு முறையிலும் சீர்திருத்தம் மேற்கொள்ப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 9 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
10 ஆண்டு சிறை:
*கறுப்பு பணம் தொடர்பாக பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள புதிய மசோதா, சட்டவிரோதமாக வெளிநாடுகளில் பணம் மற்றும் சொத்துகளை பதுக்குவோருக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்.
*அடுத்தாண்டு ஏப்ரல் முதல், இந்த புதிய சட்டம் அமலுக்கு வரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
*அதற்கு முன், பார்லிமென்டில் இந்த மசோதா பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
*மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டால், வெளிநாடுகளில் பணம் மற்றும் சொத்துகளை பதுக்குவோருக்கு, மூன்று ஆண்டில் இருந்து, 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும்; பெரும் தொகையில் அபராதமும் விதிக்கப்படும்.
*சட்டவிரோதமான சொத்து மற்றும் வருமானத்துக்கு, வருமான வரி சட்டத்தின் கீழ் வரி விதிக்காமல், புதிய சட்டத்தின்படி, வரி மற்றும் அபராதம்
விதிக்கப்படும்.
*ஏற்கனவே பணம் மற்றும் சொத்துகளை வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்துள்ளவர்கள், அதற்கான வரி மற்றும் அபராதத்தை செலுத்தினால், கடுமையான தண்டனையிலிருந்து தப்பிக்கவும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
*புதிய மசோதா நடைமுறைக்கு வந்தால், இந்த சலுகை கிடையாது. சட்டத்துக்கு புறம்பாக சொத்துகள் வாங்கி குவிப்பதோ, வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் சட்டவிரோதமாக பணத்தை பதுக்குவதோ, அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.
-http://www.dinamalar.com