நாட்டில் எந்த விவசாயிகளின் நிலங்களும் அடிமட்ட விலைக்கு மத்திய அரசால் வாங்கப்பட மாட்டாது என பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவுக்கு வலுசேர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அக்கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக அமித் ஷா சனிக்கிழமை அமிருதசரஸ் சென்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை மத்திய அரசு வழங்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. விவசாயிகள், ஏழை மக்களின் நலனுக்காகவே மோடி அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளைக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்திருப்பது, அவர்களுக்கு எளிதாக கடனுதவி வழங்கும் முத்ரா வங்கியை தொடங்கியிருப்பது உள்ளிட்ட விவசாயம் சார்ந்த திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது. மோடி அரசு பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது என்ற பொய்க் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பரப்பி வருகின்றன. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில்தான் பெருநிறுவனங்களுக்குச் சாதகமாக நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டன என்பதை மறந்துவிடக் கூடாது.
அதேபோல், நிலம் கையகச் சட்டம் குறித்தும் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டத்தின் கீழ் நாட்டில் எந்தவொரு விவசாயியின் நிலமும் அடிமட்ட விலைக்கு வாங்கப்பட மாட்டாது என்றார் அமித் ஷா.
-http://www.dinamani.com