காஷ்மீர் பண்டிட்டுகள், ஜம்மு-காஷ்மீருக்குத் திரும்புவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று அந்த மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீது உறுதியளித்தார்.
குஜராத் மாநிலம், ஆமதாபாதுக்கு சனிக்கிழமை வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தபோது இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
காஷ்மீர் பண்டிட் சமூகத்தினர், நமது கலாசாரத்தின் ஓர் அங்கத்தினர் ஆவர். அவர்கள், இணைந்து வாழ வேண்டும் என்ற கலாசாரத்தைக் கொண்டவர்கள். கடந்த 1990-ஆம் ஆண்டில் தீவிரவாதம் தலை தூக்கியபோது, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து அவர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டது.
அவர்களை மீண்டும் குடியமர்த்துவதற்காக, நாங்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அவர்களை மீண்டும் குடியமர்த்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூட முயற்சி மேற்கொண்டார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளியேறிய 3 லட்சம் பண்டிட்டுகளும் படித்தவர்கள், அறிவுஜீவிகள். அவர்கள் அனைவரும் காஷ்மீருக்குத் திரும்ப வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் எனது அரசு எடுக்கும்.
மோடிக்குப் புகழாரம்: பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் ஏற்கெனவே, ஊழலற்ற, தாமதமற்ற, வெளிப்படையான நிர்வாகம் என குஜராத் மாநிலத்தை முன்மாதிரியாக உருவாக்கினார்.
எனினும், இந்தியா பன்முக கலாசாரத் தன்மைகளைக் கொண்ட மிகப்பெரிய நாடாகும். இங்கு, “”அனைவருடன் கூடிய, அனைவருக்குமான வளர்ச்சி”, என்ற மோடியின் இலக்கை நடைமுறைப்படுத்துவது நீண்ட தூரப் பயணமாகும்.
அதற்கு அவகாசம் தேவைப்படுகிறது.
சட்டப்படி நடவடிக்கை: காஷ்மீரில் பிரிவினைவாதத் தலைவர் கிலானி தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டதில், பாகிஸ்தானின் தேசியக் கொடியை ஏந்தி வந்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முஃப்தி முகமது சயீது கூறினார்.
-http://www.dinamani.com