மோடி வருகையையொட்டி எல்லை பிரச்னையை தீர்க்க சீனா தீவிரம்

india_china_map_20121022பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 14-ஆம் தேதி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது, இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் அந்நாடு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி இந்திய அதிகாரிகளுடன் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களது கூட்டு முயற்சியின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்துவதோடு, மோடியின் பயணத்தை பயனுள்ளதாக மாற்ற முடியும் என நம்புகிறோம்.

எல்லைப் பிரச்னை குறித்து இரு நாட்டுத் தலைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என நம்புகிறேன். எனவே, அது குறித்த செயல் திட்டங்கள் தொடர்பாக இந்தியத் தரப்பில் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளோம்.

சீன அதிபர் ஜீ ஜின்பிங், கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, இரு நாட்டு எல்லையில் அமைதி நிலவி வருகிறது. மேலும், அந்தப் பயணத்தால் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகள் மேம்பட்டுள்ளன. இந்தியாவுடன் பரஸ்பரம் நிலையான நம்பிக்கையுடன் செயல்பட விரும்புகிறோம் என்று ஹுவா சுன்யிங் தெரிவித்தார்.

இம்மாதம் 14-ஆம் தேதி சீனா செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதிபர் ஜீ ஜின்பிங் தனது சொந்த ஊரான ஷியான் நகரில் வரவேற்பு அளிக்கிறார். அதற்கு மறுநாள் இரு தலைவர்களும் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

-http://www.dinamani.com

TAGS: