எங்களை தொட்டால் தென் மாநிலங்கள் பற்றி எரியும்…

naxals-terrorகோவை: எங்களை தொந்தரவு செய்தால் தென்மாநிலங்கள் பற்றி எரியும். முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்று கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தலைவன் ரூபேஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வனப்பகுதிகளில் பயிற்சி பெற்ற 55 மாவோயிஸ்டுகள் பதுங்கியுள்ளதாகவும் அவன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் 5 பேருக்கு 10 நாள் போலீஸ் காவலுக்கு அனுமதித்து கோவை மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து அவர்களிடம் க்யூ பிரிவு போலீசார் நடத்திய ரகசிய விசாரணை இது தெரியவந்துள்ளது. கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு பேக்கரியில் இருந்தபோது, சதித்திட்டம் தீட்டியதாக, மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த, ரூபேஷ், 45, அவரது மனைவி ஷைனி, 42, அனுாப், 31, கண்ணன், 46, ஈஸ்வரன், 60, ஆகிய ஐந்து பேரையும், போலீசார் கைது செய்தனர். அவர்களை ஜூன், 3 வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிடிபட்டோரை, 15 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி கோரி, ‘கியூ’ பிரிவு போலீசார், கோவை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுப்பிரமணியன், ஐந்து பேரையும், 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்த ‘கியூ’ பிரிவு போலீசார், பலத்த பாதுகாப்புடன் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்றனர்.

இதனிடையே க்யூ பிரிவு போலீசாரிடம் ரூபேஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில், கேரள மாநிலம் வயநாடுதான் எங்கள் தலைமையிடம். அங்குள்ள மலைப்பகுதியில் எங்களுக்கு தேவையான எல்லா கட்டமைப்பு வசதிகளையும் செய்துவைத்துள்ளோம். தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், தெலுங்கு சரளமாக பேசுவேன் என்று கூறினான்.

தென்மாநிலங்களில் இளைஞர்களை ஒன்றுசேர்த்து, ஆதிவாசி மக்களுக்கு ஆதரவாக பெரிய இயக்கம் நடத்தவேண்டும் என்பதுதான் எங்களது கொள்கை. நான், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கு வங்கம் சென்று, அங்குள்ள மாவோயிஸ்ட் தலைவர்களிடம் பயிற்சி பெற்று வந்துள்ளேன். துப்பாக்கி கையாள்வது எனக்கு அத்துப்படி. எனது வழிகாட்டுதலில் மலைப்பகுதிகளில் மறைந்து வாழும் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த 40 தோழர்கள், எனது எண்ணத்தை நிறைவேற்றுவார்கள். அதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உள்ளனர்.

வயநாடு மற்றும் நீலகிரி மலைப்பகுதி எங்களுக்கு பாதுகாப்பு கூடாரமாக உள்ளது. கடந்த 2008ம் ஆண்டுக்கு பிறகுதான் எங்களது இயக்கத்தில் இளைஞர்கள் ஆர்வமுடன் சேர துவங்கினர். நாடுகானி, கபினி, பவானி உள்ளிட்ட பகுதிகளில் எங்கள் குழுவினர் 55க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

துப்பாக்கி, அரிவாள், ஈட்டி உள்ளிட்ட ஆயுதம் மட்டுமே நாங்கள் தயார் செய்து கொடுக்கிறோம். இவை எல்லாம் எங்கள் தற்காப்புக்காக மட்டுமே. எங்கள் கோரிக்கை நியாயமானது. அந்த லட்சியம் நிறைவேறும்வரை ஓயமாட்டோம். இதற்கு தடையாக இருக்கும் காவல்நிலையம், அரசு அலுவலகம், முக்கிய அரசியல் புள்ளிகளின் வீடு உள்ளிட்ட எந்த இலக்கையும் எங்களால் எளிதாக தாக்க முடியும். ஏற்கனவே, கேரளாவில் மலப்புரம், பாலக்காடு, எர்ணாகுளம், வயநாடு, கண்ணனூர், கோழிக்கோடு பகுதிகளில் எங்கள் தோழர்கள் தாக்குதல் நடத்தி வெற்றி கண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் நீலகிரி, கூடலூர், கேரளாவில் வயநாடு, அட்டப்பாடி, கர்நாடகாவில் சாம்ராஜ்நகர், ஆந்திராவில் ராஜமுந்திரி உள்ளிட்ட பல பகுதிகளில் எந்த நேரத்திலும் தாக்குதல் நிகழும். எனக்கோ, எங்கள் இயக்க தளபதிகளுக்கோ நெருக்கடி கொடுத்தால், எங்கள் தோழர்கள் சும்மா இருக்கமாட்டார்கள். அவர்கள், ஏற்கனவே நன்கு பயிற்சி பெற்றுவிட்டனர். எங்களை தொந்தரவு செய்தால் தென்மாநிலங்கள் பற்றி எரியும். முடிந்தால் தடுத்துப்பாருங்கள் என்று தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: