20 தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் மனித உரிமை ஆணைய விசாரணைக்கு தடைபோடுவதா? என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அழர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆந்திர மாநிலம் திருப்பதி சேஷாச்சலம் வனப்பகுதியில் அப்பாவித் தமிழர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் நீதி பெறுவதற்கான போராட்டத்தில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனினும், நீதி கிடைக்க வாய்ப்புள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனமாகும்.
20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆந்திர சிறப்புப் புலனாய்வுக் குழு இதுவரை ஆக்கபூர்வமான விசாரணையைத் தொடங்கவில்லை. மாறாக இவ்வழக்கில் முக்கியமான சாட்சியங்களை அழித்து, இதில் தொடர்புடைய காவல்துறையினரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளைத் தான் சிறப்புப் புலனாய்வுக் குழு ஈடுபட்டிருக்கிறது. ஆந்திர காவல்துறையைக் கொண்டு நடத்தப்படும் இந்த விசாரணையில் நீதி கிடைக்காது என்பதால் தான் இவ்வழக்கை நடுவண் புலனாய்வு பிரிவு விசாரணைக்கு மாற்றக் கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வழக்கை ஆந்திரக் காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு தவிர தேசிய மனித உரிமை ஆணையமும் கூடுதல் கவனம் செலுத்தி விசாரித்து வருகிறது. சித்தூர் காடுகளில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது திட்டமிடப்பட்ட படுகொலை என்றும், இதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி டி. முருகேசன் கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்தை வலுப்படுத்துவதற்கான சாட்சியங்களை மனித உரிமை ஆணையத்தின் முன் வைப்பதன் மூலம் தான் இவ்வழக்கில் நீதியைப் பெற முடியும். ஆந்திரக் காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பி வந்த இளங்கோ, சேகர், பாலமுருகன் ஆகியோர் ஏற்கனவே தேசிய மனித உரிமை ஆணையத்திடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். கொல்லப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினரும் மனித உரிமை ஆணையத்திடம் சாட்சியம் அளித்தால் நிச்சயமாக அவர்கள் தரப்பு நியாயம் வலுவடையும்.
திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட பின்தங்கியப் பகுதிகளைச் சேர்ந்த 20 குடும்பங்களையும் தில்லி அல்லது ஹைதராபாத் அழைத்துச் சென்று வாக்குமூலம் அளிக்க வைப்பது சாத்தியமில்லாதது. இத்தகைய சூழலில் மனித உரிமை ஆணையம் அதன் விசாரணையை சென்னையில் நடத்தினால், பாதிக்கப்பட்ட அனைவரும் அதில் பங்கேற்று தங்களுக்குத் தெரிந்த தகவல்களை நீதிபதிகளிடம் பகிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு தேசிய மனித உரிமை ஆணையம் சென்னையில் விசாரணை அமர்வை நடத்த வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்திருக்கிறது. அதேபோல் கடந்த வாரம் புதுவையில் நடந்த மனித உரிமை ஆணையத்தின் விசாரணை அமர்விலும் இதேபோன்ற கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோரிக்கைகள் ஏற்கப்பட்டு தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை சென்னையில் நடத்தப்பட்டால் அது 20 தமிழர்கள் படுகொலைக்கு நீதி பெறுவதற்கான முயற்சியில் மிகவும் முக்கியமான மைல்கல்லாக அமையும்.
ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் நிலைப்பாடு தான் நீதி கிடைக்க பெரும் முட்டுக்கட்டையாக அமைந்திருக்கிறது. தமிழகம் தொடர்பான மனித உரிமை மீறல்கள் குறித்து சென்னையில் விசாரணை நடத்த அனுமதி அளிக்கக்கோரி தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் பலமுறை கடிதங்கள் எழுதியும் இதுவரை தமிழக அரசிடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் 20 பேர் படுகொலைகள் பற்றி விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் முன்வந்தாலும் தமிழக அரசு அனுமதி தராவிட்டால் விசாரணை நடத்த முடியாது. 20 தமிழர்கள் படுகொலையில் நீதி பெற தமிழக அரசு இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இந்நிலையில் மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கும் முட்டுக்கட்டைப் போடுவது தமிழர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாக அமைந்து விடும். இத்தகைய விசாரணைக்கு தமிழக அரசு பெரிய அளவில் உதவி செய்யத் தேவையில்லை; அனுமதியளித்தால் மட்டும் போதுமானது. ஆனால், அதை செய்யக்கூட தமிழக அரசு தயங்குவது கண்டிக்கத்தக்கது. இலங்கை இனப்படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஐ.நா. மனித உரிமை ஆணையக் குழு இந்தியாவில் விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி மறுத்ததைவிட இது மோசமானது ஆகும். எனவே, தமிழக அரசு அதன் கடமையை உணர்ந்து 20 பேர் படுகொலைகள் குறித்து சென்னையில் விசாரணை நடத்த வரும்படி தேசிய மனித உரிமை ஆணையத்தை அழைப்பதுடன் அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
-http://www.dinamani.com