வன்முறை ஒழிந்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்

நாட்டில் வன்முறை ஒழிந்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக கருதப்படும் தண்டேவாடா மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சென்றார்.

இந்த மாவட்டத்துக்கு 30 ஆண்டுகளுக்குப் பின்னர் செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார்.

பிரதமரின் வருகையையொட்டி, அங்கு மாநில அதிரடிப்படை போலீஸார், சிறப்புப் படையினருடன் சேர்த்து, துணை ராணுவப் படை வீரர்கள் 10,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

சத்தீஸ்கர் சென்ற பிரதமர் மோடியை, அந்த மாநில முதல்வர் ரமண் சிங் உள்ளிட்ட அமைச்சர்கள், காவல்துறை உயரதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் சமூக – பொருளாதார முன்னேற்றத்துக்காக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை மோடி பார்வையிட்டார்.

இதன் பின்னர் அவர் பேசியதாவது:

ஒரு நாட்டில் வளர்ச்சிக்கான பலன்கள் அடிமட்டத்தில் உள்ள ஏழை மக்களையும் சென்றடைய வேண்டும். அவ்வாறு சென்றடையவில்லையெனில், அது உண்மையான வளர்ச்சியாக கருத முடியாது.

நாட்டின் கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதே எனது அரசின் குறிக்கோளாக உள்ளது. ஆனால், சில பகுதிகளில் வன்முறையும், பயங்கரவாதமும் புரையோடிக் கிடப்பதால் அங்கு வளர்ச்சியின் தாக்கம் சென்றடைய முடிவதில்லை. வன்முறையால் எதையும் சாதித்துவிட முடியாது. இந்தியாவில் வன்முறைக்கு எதிர்காலம் இல்லை. எனவே, மாவோயிஸ்டுகள் வன்முறையைக் கைவிட்டு மக்களுடன் ஒன்றிணைய வேண்டும்.

மாவோயிஸ்டுகளுக்கு வேண்டுகோள்: மாவோயிஸ்டுகளுக்கு நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். சில நாள்களுக்கு மட்டும் ஆயுதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, உங்களின் வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், அங்குள்ள குழந்தைகளையும் பார்வையிடுங்கள். நீங்கள் யார் எனக் கூறிக்கொள்ளாமல் அவர்களுடன் 5 நாள்கள் மட்டும் தங்குங்கள்.

அவர்கள் அன்றாடம் அடையும் வேதனைகளையும், சந்திக்கும் பிரச்னைகளையும் பாருங்கள். உங்கள் மனதில் உள்ள வன்முறை எண்ணங்களை நிரந்தரமாக கைவிட, இந்த அனுபவமே உங்களுக்கு போதுமானதாக இருக்கும்.

வன்முறைப் பாதையில் செல்பவர்களால் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் சார்ந்த குடும்பத்தினர் எண்ணற்ற கொடுமைகளை எதிர்கொண்டு நிர்கதியாக நிற்கின்றனர். இதைத்தான் நீங்கள் சாதனை என நினைக்கிறீர்களா?

சத்தீஸ்கர் கனிம வளம் நிறைந்த மாநிலமாகும். குறிப்பாக, பஸ்தர் மண்டலத்தில் ஏராளமான இரும்புத் தாதுக்கள் கிடைக்கின்றன. இங்கு மாவோயிஸ்ட் பிரச்னை அகன்றால், நாட்டின் முதன்மையான பொருளாதார மண்டலமாக இதனை மாற்ற முடியும்.

காங்கிரஸ் மீது தாக்கு: மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பதே சிலருக்கு (காங்கிரஸ்) வாடிக்கையாகிவிட்டது. கடந்த 60 ஆண்டுகளாக வெற்றியின் மமதையில் தத்தளித்தவர்களால் தற்போது தோல்வியின் தாக்கத்தை தாங்கிக் கொள்ள முடியவில்லை. மக்கள் தங்களை தூக்கி எறிந்துவிட்டார்கள் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த ஆற்றாமையால் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை மக்களிடம் அவர்கள் பரப்பி வருகின்றனர்.

ஆனால் மக்களின் ஒருமித்த ஆதரவால் அந்தத் தடைகளை அரசு எளிதில் வெற்றிகொள்ளும் என்றார் நரேந்திர மோடி.

இதையடுத்து, சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பஸ்தர் மண்டலத்தில் ரூ.24,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டார்.

தில்மிலி கிராமத்தில் மிகப்பெரிய எஃகு ஆலை அமைப்பது, ரௌகட் – ஜக்தால்பூர் இடையே இரண்டாவது கட்டமாக ரயில் பாதை அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் இதில் அடங்கும்.

“வெற்றி-தோல்விகளைப் புறந்தள்ளுங்கள்’ வெற்றி-தோல்விகளை புறந்தள்ளிவிட்டு, லட்சியத்தின் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள் என மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறினார்.

தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள கல்வி நகர் பகுதியில் பள்ளி மாணவர்களிடம் மோடி கலந்துரையாடினார். அப்போது, மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

வெற்றி-தோல்விகளைக் கொண்டு உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்காதீர்கள். ஒரு லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு, அதனை அடைய தீவிரமாக முயற்சி செய்யுங்கள். வெற்றி-தோல்வி என்பது இரண்டாம்பட்சம்தான். அவற்றை புறந்தள்ளிவிடுங்கள். முக்கியம் என்னவெனில், தோல்விகளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் என மோடி தெரிவித்தார்.

முன்னதாக, மோடியிடம் மாணவர் ஒருவர், “நாளொன்றுக்கு 18 மணிநேரம் நீங்கள் பணிபுரிவதாக கேள்விப்படுகிறோம். இதனால் உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? எனக் கேட்டார்.

அதற்கு மோடி பதிலளிக்கையில், “நாட்டு மக்கள் அனைவரையும் எனக்குச் சொந்தமானவர்களாக பார்க்கிறேன். அதனால், அவர்களுக்காக உழைக்கிறோம் என்ற எண்ணம் இருப்பதால் எனக்கு மனச்சோர்வு ஏற்படுவதில்லை. மேலும், நேரத்தைப் பார்த்து பணிபுரிவதில் எனக்கு உடன்பாடு கிடையாது’ எனக் கூறினார்.

மாவோயிஸ்டுகளால் 250 பேர் கடத்தப்பட்டு விடுவிப்பு; ஒருவர் கொலை

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் கிராம மக்கள் 250 பேரை மாவோயிஸ்டுகள் வெள்ளிக்கிழமை இரவு கடத்திச் சென்றனர். அவர்களில் ஒருவரை அடித்துக் கொன்ற மாவோயிஸ்டுகள், மற்ற அனைவரையும் சனிக்கிழமை விடுவித்தனர்.

சுக்மா மாவட்டத்தின் அண்டை மாவட்டமான தண்டேவாடாவில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், கிராம மக்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சுக்மா மாவட்டத்தின் மாரங்கா மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 250 பேரை வெள்ளிக்கிழமை இரவு கடத்திய மாவோயிஸ்டுகள், அருகில் உள்ள வனப்பகுதிக்குள் அவர்களை கொண்டு சென்றனர். மாரங்கா அருகேயுள்ள நதியின் குறுக்கே பாலம் கட்டும் பணியை மாவோயிஸ்டுகள் எதிர்த்து வந்தனர். ஆனால், பாலம் கட்டுமானப் பணிக்கு கிராம மக்கள் ஆதரவு தெரிவித்ததால், அவர்களை கடத்தி சென்று விட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு வனப்பகுதிக்குள் மக்கள் நீதிமன்றம் (ஜன் அதாலத்) நடத்திய மாவோயிஸ்டுகள், ஒருவரை அடித்து கொலை செய்து விட்டு மற்றவர்களை விடுவித்தனர்.

இதுதொடர்பாக, சுக்மா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.ஷிரவண் கூறியதாவது:

டோங்பால் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட காதம், முங்கா கிராமங்களுக்கு இடையே உள்ள காடுகளுக்குள், மாவோயிஸ்டுகள் மக்கள் நீதிமன்றம் நடத்தியுள்ளனர்.

இதில், சதாராம் நாக் என்பவரை மாவோயிஸ்டுகள் அடித்துக் கொன்றுள்ளனர். பாலம் கட்டுமானப் பணி மேற்பார்வையாளராக சதாராம் நாக் இருந்துள்ளார். இதுதான் மாவோயிஸ்டுகள் அவரை கொலை செய்ததற்கான காரணமாக இருக்கலாம். விடுவிக்கப்பட்ட மக்கள், தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். சதாராம் நாக் உடலை அவர்கள் எடுத்து வருகின்றனர் என்று ஷிரவண் கூறினார்.

முரண்பட்ட தகவல்கள்: முன்னதாக, மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட கிராம மக்களின் எண்ணிக்கை தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வெளியாகின. சுக்மா மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஹரீஷ் ராத்தோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “400 முதல் 500 கிராமத்தினரை வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்று விட்டனர்’ என்றார். கடத்தல் தொடர்பாக காவல்துறை முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு வருவது குறித்து முதல்வர் ரமண் சிங்கிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு, அவர் பதிலளிக்கையில், “சுக்மா மாவட்டத்தின் சில கிராமங்களுக்குள் மாவோயிஸ்டுகள் ஆயுதங்களுடன் புகுந்து, அங்கிருந்த 200 முதல் 250 பேரை கடத்திச் சென்றனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் எந்தக் குழப்பமும் இல்லை’ என்றார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்வதை புறக்கணிக்கும்படி மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடாவில்

நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற

பிரதமர் நரேந்திர மோடிக்கு பழங்குடியினர்களின் பாரம்பரிய தலைக்கவசத்தை அணிவிக்கும்

அந்த மாநில முதல்வர் ரமண் சிங்.

-http://www.dinamani.com

TAGS: