சென்னை: சென்னையில் ரூபாய் 5 கோடி மதிப்புள்ள கோவில் சிலைகள் பிடிப்பட்டதுடன், 4 கடத்தல்காரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. பிரதீப் வி.பிலீப், “நமது சிலை திருட்டு தடுப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை மூலம், கடத்தி விற்பனை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்ட 2 சாமி சிலைகளை மீட்டுள்ளனர்.
சிலைகளை கடத்தி வந்த 4 கடத்தல்காரர்களையும் கைது செய்துள்ளனர். idols recovered from smugglers in Chennai நேற்று பிற்பகல் 3.30 மணி அளவில் சிலை திருட்டு தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் 4 மர்ம நபர்கள் அறை எடுத்து தங்கி உள்ளனர் என்றும், அவர்கள் கடத்தல் சிலைகளை விற்பதற்கு அங்கு பேரம் பேசி வருவதாகவும், அந்த ரகசிய தகவலில் தெரிய வந்தது.
உடனே ஐ.ஜி அசோக்குமார்தாஸ், சிலை திருட்டு தடுப்பு போலீஸ் டி.ஐ.ஜி பொன்மாணிக்கவேல் ஆகியோர் தலைமையில் துணை சூப்பிரண்டு சுந்தரம், இன்ஸ்பெக்டர்கள் அசோக்நடராஜன், ரவி, வேலு மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலை அடுத்த 10 நிமிடங்களில் முற்றுகையிட்டு சோதனை வேட்டை நடத்தினார்கள்.
அந்த சோதனையில் குறிப்பிட்ட அறையில் தங்கி இருந்த 4 பேர் பிடிபட்டனர். அவர்கள் வைத்திருந்த 1 அடி உயரம் கொண்ட விஷ்ணு சிலை மற்றும் சிறிய புத்தர் சிலை ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அவர்கள் வைத்திருந்த சொகுசு கார்களும், ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை சிலை திருட்டு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
அவர்களில் ஜான், சிவா என்ற சிவலிங்கம் ஆகிய இருவரும் பெங்களூர் அருகே உள்ள அன்சூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். ராஜேஷ் சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வரவேற்பு அதிகாரியாக வேலை செய்கிறார். இவர் எம்.பி.ஏ பட்டதாரி. தேவராஜ் சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர். மேற்கண்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சத்தியமங்கலம் அருகே இருக்கும் திம்மம் என்ற ஊரில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலில் மேற்கண்ட 2 சிலைகளையும் திருடி உள்ளனர். ஜான் மற்றும் சிவா ஆகிய இருவரும் சிலைகளை காரில் கடத்திக்கொண்டு சென்னைக்கு வந்துள்ளனர்.
காரில் போலீஸ் என்ற எழுத்துடன் ஸ்டிக்கர் ஒட்டி உள்ளனர். இவர்கள் சிலைகளை எப்போது திருடினார்கள், இவர்களே திருடினார்களா அல்லது வேறு யாராவது திருடிய சிலைகளை வாங்கி சென்னையில் விற்பனை செய்ய வந்தார்களா என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.
கைது செய்யப்பட்டுள்ள ராஜேஷ் மற்றும் தேவராஜ் ஆகிய இருவரும் சிலைகளை விற்பனை செய்வதற்கு இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர். ரூ.50 லட்சம் வரை சிலைக்கு விலை பேசி உள்ளனர்.
இந்த சிலைகள் 600 ஆண்டுகள் பழமையான பஞ்சலோக சிலைகள் ஆகும். இதன் மதிப்பு வெளிநாடுகளில் ரூ.5 கோடி வரை இருக்கும். இந்த சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி மேற்கொண்டுள்ளார்களா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம்.
தகவல் கிடைத்த 2 மணி நேரத்திற்குள் அதிரடியாக செயல்பட்டு சிலைகளை மீட்டு, கடத்தல்காரர்களை கைது செய்த சிலை திருட்டு தடுப்பு போலீசாரை நான் பாராட்டுகிறேன். ஏற்கனவே சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ்கபூர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அவரால் தமிழகத்தில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட சிலைகள் ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டு, அந்த நாட்டின் பிரதமரால், நமது பிரதமரிடம் ஒப்படைக்கப்பட்டு, தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த மகத்தான சாதனையை சிலை திருட்டு தடுப்பு போலீசார்தான் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிலை திருட்டு பற்றி தகவல் கொடுப்பதற்கு, பொதுமக்கள் எந்த நேரத்திலும் சிலை திருட்டு தடுப்பு போலீசாரை அணுகலாம்” என்று தெரிவித்தார்.