டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதி: நேபாள இந்தியன் முஜாகிதீன் தலைவனாக செயல்பட்டது அம்பலம்

irfanபுதுடெல்லி, மே 12- நேபாள நாட்டில் நிகழ்ந்த பூகம்பத்தை பயன்படுத்தி அந்நாட்டில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தலைவனான இர்பான் அகமது சிறையில் இருந்து தப்பித்து சென்றான். இந்நிலையில் அவனை கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

முன்னதாக இந்தியாவில், டெல்லி ஹவுரா ராஜ்தானி மற்றும் ஹவுரா டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உள்பட பல்வேறு ரெயில்களில் குண்டு வெடிப்பு  சம்பவத்தில், இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த இர்பான் அகமதுவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதன் பின் சிறையிலடைக்கப்பட்ட அவன், கடந்த 2001 ஆம் ஆண்டு தனது சகோதரரின் திருமணத்தில் கலந்து கொள்ள பரோலில் சென்றான்.

அவ்வாறு பரோலில் சென்ற அவன் தலைமறைவானதை தொடர்ந்து கடந்த 14 ஆண்டுகாலமாக டெல்லி போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து உத்தரப்பிரதேசத்துக்கு சென்ற டெல்லி போலீசார் இர்பானை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இர்பான், அங்கு இந்தியன் முஜாகிதீன் அமைப்பை தோற்றுவித்தவனான ஆசிப் ரெசா கானை சந்தித்துப்பேசி நண்பனாகியுள்ளான். அதன்பின் 2001 ஆம் சகோதரரின் திருமணத்துக்கு சென்று தலைமறைவான இர்பானை தொடர்புகொண்ட ஆசிப், கொல்கத்தாவிற்கு வந்து தன்னை சந்திக்குமாறு கூறியுள்ளான்.

அதன்படி அங்கு சென்ற இர்பான், ஆசிப் மற்றும் அவனது சகோதரர் ஆமிர் ஆகியோரை சந்தித்துள்ளான். அப்போது நேபாள நாட்டின் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை தலைமை ஏற்று இர்பான் செயல்படவேண்டும் என்று ஆசிப் கூறியுள்ளான். இதனையேற்று கொல்கத்தாவில் இருந்து நேபாளத்திற்கு தப்பிச்சென்ற இர்பான், அங்கு ஜெர்கின் கோட் மற்றும் பிரவுசிங் சென்டர் கடை வைத்து நடத்தி வந்துள்ளான். அந்த நேரத்தில் நேபாள குடியுரிமை பெறுவதற்காக போலி ஆவணங்களை வழங்கியதாக கூறி அந்நாட்டு போலீசார் இர்பானை கைது செய்தனர்.

அதன் பின் சிந்துபால் சவுக் சிறையில் அடைக்கப்பட்ட அவன், பூகம்பத்தை பயன்படுத்தி இந்தியாவுக்கு தப்பி வந்துள்ளான். எனினும் டெல்லி போலீசின் சாமர்த்தியமான செயல்பாட்டால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

-maalaimalar.com

TAGS: