காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியின் சாதனைகள் அதிகம்

“கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் தலைமையிலான அரசின் ஆட்சியை ஒப்பிடுகையில், கடந்த 10 மாதங்களில் ஏராளமான சாதனைகளை பாஜக தலைமையிலான மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று, வரும் 26-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைய உள்ளது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக எம்.பி.க்களின் கூட்டம், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய மோடி பேசியதாவது:

மனித நேயத்தைக் காப்பதிலும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதிலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. அரசு தொடங்கியுள்ள வளர்ச்சித் திட்டங்களை யாராலும் தடுக்க முடியாது.

கருப்புப் பணம்: மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கருப்புப் பணத்தை மீட்பதற்காக, சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. மேலும், கருப்புப் பணத்தை தடுப்பதற்கு மசோதாவும் கொண்டு வரப்பட்டுள்ளது.

எதிர் பிரசாரம்: நாம் எதிர்க் கட்சியினருடன் போராடவில்லை. ஆனால், ஆட்சியில் இருந்தபோது, அதன் பலன்களை அனுபவித்துவிட்டு, பின்னர் விரக்தியடைந்து அரசுக்கு எதிராக பிரசாரம் செய்பவர்களுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. கட்சி உறுப்பினர்கள், அவ்வாறானதவறை செய்யக் கூடாது என்று மோடி பேசினார்.

ஊழல் இல்லை: மோடியைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, “கடந்த 10 ஆண்டுகளாக நமது நாடு, “ஊழல் இந்தியா’வாக இருந்த நிலையில், கடந்த ஓராண்டுகால பாஜக ஆட்சியில் எந்தவொரு ஊழலும் நடைபெறவில்லை’ என்றார்.

கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

தங்களது சொந்தக் காரணங்களுக்காக சிலர், மக்களின் வறுமையை முன்வைத்து அரசியல் செய்து வருகின்றனர். நாட்டு மக்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, நாட்டின் வளர்ச்சிக்கான அரசியலை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய, கடந்த ஓராண்டில் பிரதமர் மோடி வலுவான அடித்தளம் அமைத்துள்ளார். மக்களுக்கும், அரசுக்கும் இடையே பாலமாக இருந்து,நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக எம்.பி.க்கள் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்.

மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சரக்கு- சேவை வரி மசோதா, கருப்புப் பணத் தடுப்பு மசோதா ஆகியவற்றின் மூலம், நாட்டின் பொருளாதார ஒருங்கிணைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார் வெங்கய்ய நாயுடு.

இந்தக் கூட்டத்தில், நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும், ஏழைகள், நலிவடைந்த பிரிவினரின் சமூகப் பாதுகாப்புக்கும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாஜக எம்.பி.க்கள் பாராட்டு தெரிவித்தனர். கூட்டாட்சி கோட்பாட்டின்படி, மாநிலங்களுடனான ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் மூலம், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தி, சர்வதேச அரங்கில் நாட்டின் பெருமையை உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிறகு, மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், “மத்திய அரசின் ஓராண்டு சாதனைகளையும், வளர்ச்சித் திட்டங்களையும் தொகுதி மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்களுக்கு மோடி அறிவுறுத்தினார்’ என்றார்.

முன்னதாக, மத்திய அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோர், வரும் 26-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, விவசாயிகள், நலிவடைந்தவர்களின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர் என்று பாஜக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

-http://www.dinamani.com

TAGS: