தீர்ப்பில் பிழை இருப்பதாக புகார்: நீதிபதி குமாரசாமி அவசர ஆலோசனை – திருத்தம் வெளியிடப்படுமா?

kumarasamyபெங்களூர், மே. 13–

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமி கடந்த 11–ந்தேதி தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பில் ஜெயலலிதா வாங்கிய கடன் தொகை கூட்டலில் தவறு இருப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி, அரசு வக்கீல் ஆச்சார்யா ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.

மேலும் நீதிபதி குமாரசாமி அளித்த தீர்ப்பில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து இருந்தனர். அதாவது ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன்களை பட்டியலிடும் போது அதன் கூட்டு தொகை ரூ.10 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 774 வருகிறது.

ஆனால் ரூ.24 கோடியே 17 லட்சத்து 31 ஆயிரத்து 274 என்ற கூட்டு தொகையின் அடிப்படையில் குமாரசாமி தீர்ப்பு அளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் உண்மையான வருவாய்க்கும் சொத்துக்களுக்கும் உள்ள வித்தியாசம் ரூ.2.82 கோடி என்றும் இது வருவாயை விட 8.12 சதவீதம் மட்டுமே அதிகம் என நீதிபதி குமாரசாமி கூறி இருந்தார்.

ஆனால் ஜெயலலிதாவின் சரியான வருவாயை விட சொத்து மதிப்பு 76 சதவீதம் அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி உள்ளனர். இது சட்ட ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் நீதிபதி குமாரசாமி இன்று அவசர ஆலோசனை நடத்தினார். தீர்ப்பு வழங்கிய அறை எண். 14–ல் வைத்து அவர் உதவியாளர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள குறைபாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.

நீதிபதி குமாரசாமியின் இந்த ஆலோசனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டப்பிரிவு 362–வது பிரிவின்படி தீர்ப்பில் உள்ள பிழைகளை திருத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தீர்ப்பில் உள்ள கூட்டல் தவறுகளை திருத்தம் செய்ய முடியுமா? என்பதற்கு வக்கீல் பால் கனகராஜ் கூறியதாவது:–

ஒரு நீதிபதி தீர்ப்பை அறிவித்து, அது வெளியிடப்பட்டு விட்டால், மீண்டும் அதில் அவர் எந்த மாற்றமும் செய்ய இயலாது. ஆனால் எழுத்துப் பிழையோ அல்லது தட்டச்சுகளில் பிழை இருந்தால் அதை மட்டுமே செய்ய முடியும்.

அப்படி இல்லாமல் தீர்ப்பின் ஏதாவது ஒரு இடத்தில் திருத்தம் செய்தால், அது வழக்கின் அடிப்படை தன்மையையே பாதித்து விடும். தீர்ப்பு வழங்கிய நீதிபதியே தன் தீர்ப்பில் மாற்றம் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

-http://www.maalaimalar.com

TAGS: