ஆந்திர துப்பாக்கிச் சூடு: அரசநத்தத்தில் மனித உரிமை ஆணையக் குழுவினர் விசாரணை

ஆந்திரத்தில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழகத் தொழிலாளர்களின் உறவினர்களிடம், தேசிய மனித உரிமைகள் ஆணையக் குழுவினர் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே, சேஷாசலம் வனப் பகுதியில் செம்மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டதாக தருமபுரி மாவட்டம், சித்தேரி ஊராட்சி, அரசநத்தம், கலசப்பாடி, ஆலமரத்துவளவு, கருக்கம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஹரிகிருஷ்ணன், ல.லட்சுமணன், வேலாயுதம், சிவலிங்கம், சிவக்குமார், தீ.லட்சுமணன், வெங்கடேசன் உள்ளிட்ட 20 பேரை ஆந்திர போலீஸார் சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில், தமிழக தொழிலாளர்களைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய போலீஸார் மீது ஆந்திர மாநில உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து, சிறப்புக் குழுக்களை அமைத்து விசாரித்து வருகிறது.

இதன்படி, தேசிய மனித உரிமை ஆணையக் குழுவின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சுமேதா திவேதி தலைமையில், தினால்ஜித் உப்பல், நதின்குமார், குரிலேஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் புதன்கிழமை காலை 10 மணியளவில் அரூர் வந்தனர்.

தொடர்ந்து, இந்தக் குழுவினர் அரூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள அரசநத்தம் மலை கிராமத்துக்குச் சென்றனர். அங்கு பகல் 12 மணி முதல் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 7 தமிழக தொழிலாளர்களின் உறவினர்களிடம் தனித்தனியே ரகசிய விசாரணை நடத்தினர். ஒவ்வொரு தொழிலாளர் குடும்பத்தினரிடமும் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

ஆந்திரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தொழிலாளர்கள் வழக்கமாக என்ன தொழில் செய்து வந்தனர், குடும்பப் பின்னணி, மாத வருவாய், வெளியூர் செல்லும் தொழிலாளர்கள் எத்தனை நாள்கள் கழித்து வீடு திரும்புவர், ஆந்திரத்தில் இருந்து பிரேதப் பரிசோதனைக்கு பிறகு கொண்டு வரப்பட்ட சடலங்களின் நிலை என்ன, தொழிலாளர்களின் உடல் உறுப்புகள் சேதமடைந்தவாறு இருந்தனவா என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தொழிலாளர்களின் குடும்பத்தினரிடம் மனித உரிமைகள் ஆணையக் குழுவினர் கேட்டறிந்தனர்.

முன்னதாக, சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கல்லத்துப்பட்டியைச் சேர்ந்த தொழிலாளி சசிக்குமாரின் உறவினர்களிடம் வாச்சாத்தியில் தேசிய மனித உரிமைகள் ஆணையக் குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, அரூர் வருவாய்க் கோட்டாட்சியர் வி.ஷகிலா உடனிருந்தார்.

நஷ்டஈடு தேவை: ஆந்திரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக தொழிலாளர்களின் இறப்புக்கான காரணம் இறப்புச் சான்றிதழ்களில் குறிப்பிடப்படவில்லை. பிரேதப் பரிசோதனைக்கு பிறகு ஒப்படைக்கப்பட்ட சடலங்களின் ஈமச்சடங்கு செய்யக்கூட ஆந்திர மாநில அரசு நிதியுதவி அளிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட தமிழக தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்பு, அரசநத்தம் மலைக் கிராமத்துக்கு தார்ச் சாலை வசதி, மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, அரூர் எம்.எல்.ஏ. பி.டில்லிபாபு, தேசிய மனித உரிமைகள் ஆணையக் குழுவினரிடம் நேரில் மனு அளித்து வலியுறுத்தினார்.

வருவாய் துறையினர் பங்கேற்க எதிர்ப்பு: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரிடம் மனித உரிமைகள் ஆணையக் குழுவினர் நடத்திய விசாரணையின்போது வருவாய்த் துறையினர் பங்கேற்கக் கூடாது என, மதுரை மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஐ.ஆசிர்வாதம் தலைமையிலான குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

-http://www.dinamani.com

TAGS: