சண்டிகர்: ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 39 இந்தியர்களும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அங்கிருந்து தப்பி வந்தவர் அளித்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈராக்கின் மொசூல் நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11ம் தேதி கட்டட வேலையில் இருந்த 39 இந்தியர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டனர். தற்போது வரை அவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே, கடத்திச் செல்லப்பட்டவர்களில் ஹர்ஜித் மசி (25) என்பவர் ஈராக்கிலிருந்து தப்பி இந்தியா வந்து சேர்ந்தார். அவரின் மத்திய உளவுத்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் ஹர்ஜித் மசி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்தாண்டு ஜூன் மாதம் 11ம் தேதி மொசூல் நகரில் பணியில் இருந்த 39 இந்தியர்களை ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கடத்திச் சென்று சிறைவைத்தனர். எங்களுடன் அந்த அறையில் 50 வங்கதேசத்தவர்களும் இருந்தனர். சில நாட்கள் கழித்து நாங்கள் அனைவரும் மற்றொரு பயங்கரவாத குழுவிடம் ஒப்படைக்கப்பட்டோம். அங்கு ஒரு சிறு அறையில் அடைக்கப்பட்ட எங்களை நோக்கி பயங்கரவாத குழு ஒன்று கண்மூடித்தனமாக சுட்டது. இதில் என்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் இறந்தனர். நான் இறந்தது போல் நடித்து அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன். இவ்வாறு ஹர்ஜித் மசி தெரிவித்தார்.
சுஷ்மா சுவராஜ் மறுப்பு:
ஹர்ஜித் மசியின் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், ஈராக்கில் சிக்கியுள்ள 39 இந்தியர்களை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. அவர்களை கண்டுபிடித்து பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வருவோம். கடத்தப்பட்டவர்கள் குறித்து எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர். ஹர்ஜித் மசியின் தகவல்கள் நம்பிக்கை அளிக்கும்படி இல்லை. நான் நம்பிக்கையை இழக்க விரும்பவில்லை. இவ்வாறு சுஷ்மா தெரிவித்தார்.
-http://www.dinamalar.com