ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும்: உத்தரகண்ட் ஆளுநரிடம் தருண் விஜய் கோரிக்கை

ஹரித்துவார் நகரில் வழிபாட்டு ஆரத்தி நடைபெறும் பகுதியில் திருவள்ளுவர் சிலை அமைக்க வேண்டும் என்று உத்தரகண்ட் மாநில ஆளுநர் கே.கே. பாலிடம் அந்த மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ் ஆர்வலருமான தருண் விஜய் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக ஆளுநரை அவரது அலுவலகத்தில் தருண் விஜய் வெள்ளிக்கிழமை சந்தித்தார். அப்போது தமிழகத்திலும் வட மாநிலங்களிலும் திருவள்ளுவர், திருக்குறள் பெருமைகளை பிரபலப்படுத்தி வரும் தருண் விஜய் முயற்சிக்கு கே.கே. பால் பாராட்டுத் தெரிவித்தார். ஹரித்துவாரில் திருவள்ளுவருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று தருண் விஜய் கோரிக்கை விடுத்தார்.

இதைக் கேட்ட கே.கே. பால், “உங்கள் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறேன். ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை அமைக்க பரிசீலிக்கும்படியும் அரசை கேட்டுக் கொள்கிறேன். மாநில ஆளுநர் என்ற நிலையில் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவுகிறேன்’ என்று உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து, உத்தரகண்ட் மாநில ஆட்சியர் ஹரீஷ் சந்த் செம்வால், காவல் துறை உயரதிகாரிகள் ஆகியோருடன் தருண் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது கங்கை நதிக்கு தினமும் பக்தர்கள் ஆரத்தி எடுக்கும் பிரதான கோயில் அமைந்துள்ள பகுதி, அதையொட்டிய பகுதிகள் என திருவள்ளுவர் சிலை அமைக்க மொத்தம் ஐந்து இடங்களை அதிகாரிகள் முன்மொழிந்தனர். இதில் ஓர் இடத்தை சிலை அமைக்கத் தேர்வு செய்து அதற்கான அனுமதியை அரசிடம் பெற உதவும்படி அதிகாரிகளை தருண் விஜய் கேட்டுக் கொண்டார்.

இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் தருண் விஜய் பேசுகையில், “எனது சொந்த மாநிலமான உத்தரகண்டில் திருவள்ளுவருக்குச் சிலை அமைக்க விரைவில் மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.

ஹரித்துவாருக்கு கும்பமேளாவின் போது சுமார் ஒரு கோடி பக்தர்கள், யாத்ரீகர்கள் வருவார்கள். அந்த வகையில் உலகம் முழுவதும் இருந்து ஹரித்துவாருக்கு வரும் மக்கள் திருவள்ளுவர் சிலையைப் பார்ப்பதன் மூலம் அவரது பெருமைகளையும் அவரது படைப்பையும் உணரும் வாய்ப்பு கிடைக்கும்’ என்றார்.

-http://www.dinamani.com

TAGS: