இந்திய, சீன எல்லை பிரச்னைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண்பது என இரு நாடுகளும் கூட்டாக முடிவு செய்துள்ளன.
சீனப் பிரதமர் லீ கெகியாங்கை, பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மண்டப மாளிகையில் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில், எல்லை பிரச்னை, வர்த்தகம், பயங்கரவாதம், முதலீடு, பருவ நிலை மாற்றம், ஐ.நா. அமைப்பில் சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர்.
அப்போது கெகியாங்கிடம் மோடி கூறியதாவது:
இந்திய – சீன எல்லைப் பகுதியில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஏ.சி) எங்கே இருக்கிறது என இரு தரப்புக்கும் தெரியாததால், அங்கு எப்போதும் பதற்றம் நீடித்து வருகிறது. எனவே, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு குறித்து சீனா தெளிவுபடுத்த வேண்டும்.
மின்-நுழைவு இசைவு: இந்தியாவுக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளுக்கு மின்-நுழைவு இசைவு (இ-விசா) வழங்கப்படும். அதேபோல், அருணாசலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு தனித்தாளிலான நுழைவு இசைவு வழங்குவது போன்ற நடைமுறைகளை சீனா மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
உலக நன்மைக்காக..: கடந்த சில பத்தாண்டுகளாக, இந்தியா – சீனா உறவில் குழப்பம் நீடித்து வருகிறது. எல்லை பிரச்னை, இரு நாடுகளுக்கு இடையேயான உறவைப் பாதிக்கும் காரணியாக இருக்கக் கூடாது. இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்படுவற்கு எல்லைப் பகுதியில் அமைதி நிலவ வேண்டியது முக்கியமாகும்.
இரு நாடுகளுக்கும் வரலாற்றுக் கடமைகள் உள்ளதால், இந்தியாவும், சீனாவும் பரஸ்பரம் அக்கறை செலுத்தி, ஒன்றையொன்று வலிமைப்படுத்த வேண்டியது அவசியமாகும். நுழைவு இசைவு வழங்குவது, இரு நாடுகளிடையே எல்லை கடந்து பாயும் ஆறுகள் உள்ளிட்ட விவகாரங்களில் இரு தரப்பும் அதிருப்தியடைவதற்கு முன்பாகவே, அவற்றுக்குத் தீர்வு காண்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு மோடியும், லீ கெகியாங்கும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எல்லை பிரச்னையை தீர்ப்பதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் விரைவில் தீர்வு காண இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளன.
இதற்கான திட்டங்களை வகுப்பதற்கும், அவற்றை மூன்று கட்டங்களாக செயல்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இரு நாட்டு மக்களின் நீண்டகால நலனையும், இரு தரப்பு உறவையும் கருத்தில் கொண்டு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், பயங்கரவாதத்துக்கு எதிராக இணைந்து போராடுவது என இரு நாட்டுத் தலைவர்களும் முடிவு செய்துள்ளனர் என்று அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மோடியும், லீ கெகியாங்கும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, மோடி பேசியதாவது: எங்களது சந்திப்பு ஆக்கபூர்வமாகவும், வெளிப்படையாகவும், நட்புணர்வோடும் அமைந்திருந்தது. அனைத்து பிரச்னைகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்.
இந்தியாவுடனான நீண்ட கால உறவைக் கருத்தில் கொண்டு, சில விவகாரங்களில் சீனா தனது அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சீனப் பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
ஆசிய பிராந்தியத்தில் பெரும் பங்காற்ற வேண்டிய வாய்ப்பை இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மோடி கூறினார்.
இதையடுத்து, லீ கெகியாங் கூறியதாவது: எங்களுக்கு இடையே சில விவகாரங்களில் மாற்றுக் கருத்துகள் இருப்பதை மறுப்பதற்கில்லை. அவற்றைத் தீர்ப்பதற்கு அரசியல் முதிர்ச்சி தேவைப்படுகிறது.
இந்தியா – சீனா இடையேயான உறவை அடுத்தக் கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு, இந்தியாவுடன் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது என்றார் லீ கெகியாங்.
மானசரோவர் பாதை
கைலாயம்- மானசரோவர் புனித யாத்திரை, சீனாவின் தன்னாட்சிப் பகுதியில் உள்ள திபெத்தின் நாது லா கணவாய் வழியாக வரும் ஜூன் மாதம் முதல் தொடங்குகிறது. இதற்கு அனுமதியளித்த சீன அரசுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இதனால், முதியவர்களும் பேருந்துகளில் எளிதாக மானசரோவருக்கு செல்லலாம்.
சென்னையில் சீனத் துணைத் தூதரகம்
நரேந்திர மோடி – லீ கெகியாங் இடையிலான சந்திப்பின்போது, சீனாவின் செங்டூவில் இந்தியத் துணைத் தூதரகம் அமைப்பதற்கும், சென்னையில் சீனாவின் துணைத் தூதரகம் அமைப்பதற்கும் இரு நாடுகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மோடி கூறியதாவது:
சென்னையிலும், செங்டூவிலும் துணைத் தூதரகங்கள் அமைக்க முடிவு செய்திருப்பது, இரு நாடுகளிடையே பரஸ்பர நம்பிக்கை வளர்ந்து வருவதையும், உறவுகளை விரிவுபடுத்துவதில் இரு நாடுகளும் உறுதியுடன் இருப்பதையும் பிரதிபலிக்கிறது என்றார் அவர்.
தொழிலதிபர்களுடன் இன்று சந்திப்பு
மோடி தனது சீனப் பயணத்தின் இறுதிக் கட்டமாக, அந்நாட்டு தொழிலதிபர்களை சனிக்கிழமை சந்தித்துப் பேசுகிறார். இந்தச் சந்திப்பின்போது, சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.63,000 கோடி) மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்திய சமூகத்தினர் மத்தியிலும் மோடி உரையாற்றுகிறார்.
-http://www.dinamani.com