முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நாள்: இழந்த சுதந்திரத்தை மீட்டெடுப்போம.. வேல்முருகன்

Velmurugan_tvkசென்னை: மே 18ம் தேதி நடந்த முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாளையொட்டி இழந்த சுதந்திரத்தை மீட்டெடுப்போம். இனப்படுகொலையாளனை தண்டிப்போம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2009 ஆம் ஆண்டு மே 18-ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் ஒன்றரை லட்சம் தமிழீழத் தமிழ் உறவுகள் ஈவிரக்கமின்றி கொத்து கொத்தாக சர்வதேசம் தடை விதித்த அத்தனை வகை ஆயுதங்களைக் கொண்டும் கொத்து கொத்தாக கொடூரமாக இன அழிப்புக்குள்ளாக்கப்பட்ட நாள்.

சிங்களத்தோடு இந்தியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட சதிகார தேசங்கள் கை கோர்த்து நின்று அரும்பி நின்ற தமிழீழத் தேசத்தை கருக வைத்த கரிநாள்… ஆண்டுகள் உருண்டோடிவிட்டன..

இனப்படுகொலை நடந்தேறி 5 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன… ஒட்டுமொத்த உலகத்தின் கண்முன் நிகழ்த்தப்பட்ட இந்த தமிழினப்படுகொலையாளிகள் ஒருவன் கூட இன்னமும் தண்டிக்கப்படவில்லை..

மாறாக இந்த இனப் படுகொலையை நிகழ்த்திய சிங்களத்தோடு நான் நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு தமிழரின் ரத்தத்தின் மீது சர்வதேசம் கைகுலுக்கி நட்பு பாராட்டுகின்றன..

இப்படியான ஒரு கைவிடப்பட்ட தனித்த நிலையில்தான் தமிழினம் இன்றும் நின்று கொண்டிருக்கிறது.. சிங்களமும் சர்வதேசமும் கூட்டாக நிகழ்த்திய இனப்படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரையும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரையும் நமது போராட்டத்தைத் தொடருவோம் என்பதை இன்றைய மே 18-ஆம் நாள் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலின் சூளுரையாக உறுதியேற்போம்!

இலங்கை தேசத்திலும் இந்திய தேசத்திலும் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு அழிக்கப்பட்டு கேட்பாரற்று கிடக்கும் தமிழினத்தின் வாழ்வுரிமையை நிலைநிறுத்த நாம் இழந்த நமது சுதந்திரத்தை மீட்டெடுக்க ஜாதி, மத, கட்சி எல்லைகளை கடந்து தமிழராக கரம் கோர்த்து களமாடுவோம் என இன்றைய துயரமும் வலியும் தோய்ந்த நாளில் உறுதியேற்போம்.

முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட போர்க்களங்களில் வீரச்சாவடைந்த அத்தனை தமிழ் மக்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறது! வீரவணக்கம்! வீரவணக்கம்!! என்று அவர் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: