கைகளை இழந்த ஆப்கன் வீரருக்கு மாற்று கைகள் பொருத்தி சாதனை

kaiகொச்சி: ஆப்கானிஸ்தானின் காந்தகார் நகரில், மூன்றாண்டுகளுக்கு முன், வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும்போது, இரு கைகளையும் இழந்த, அந்நாட்டின் ராணுவ அதிகாரிக்கு, கேரளாவின் கொச்சி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, புதிதாக இரண்டு கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

ஆப்கன் ராணுவ அதிகாரி அப்துல் ரஹீமுக்கு, 30, இந்தியக் கைகள் பொருத்தும் சிக்கலான அறுவை சிகிச்சை, கொச்சியில் உள்ள, அமிர்தா மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனத்தில், கடந்த மாதம் நடத்தப்பட்டது. அமிர்தா மருத்துவமனை யில், இதற்கான அறுவை சிகிச்சை, 15 மணி நேரம் நடைபெற்றது. கேரளாவைச் சேர்ந்த, மூளைச்சாவு அடைந்த நபர் ஒருவர் இறந்ததும், அவரின் இரு கைகளும் வெட்டி எடுக்கப்பட்டு, ஆப்கன் வீரருக்கு பொருத்தப்பட்டன. இந்த அறுவை சிகிச்சை யில், 30க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்றனர். கனகச்சிதமாக கைகள் பொருத்தப்பட்ட, ஆப்கன் வீரர், இன்னும் ஒரு சில மாதங்கள் மருத்துவமனையிலேயே தங்கியிருக்க வேண்டும். அதுவரை, உடல் இயக்க பயிற்சிகளை அவர் மேற்கொள்ள வேண்டும். அதன் பிறகு அவரின் இந்திய கைகள் இயல்பான செயல்பாட்டிற்கு வரும் என, டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

‘அமிர்தா மருத்துவமனையில் நடத்தப்பட்ட, வெற்றிகரமான, இரண்டாவது கைமாற்று அறுவை சிகிச்சை இது. நான்கு மாதங்களுக்கு முன், கேரளாவைச் சேர்ந்த, 30 வயது இளைஞர் ஒருவருக்கு கைகள் மாற்றப்பட்டன. அவர் இப்போது, இயல்பாக செயல்படுகிறார்’ என, பிளாஸ்டிக் சர்ஜரி துறை தலைமை பேராசிரியர் சுப்ரமணிய அய்யர், நிறுவனத்தின் இயக்குனர் பிரேம் நாயர் ஆகியோர் தெரிவித்தனர்.

-http://www.dinamalar.com

TAGS: