கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் 10 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்

saturakiriவத்திராயிருப்பு : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நேற்று பெய்த பலத்த மழை காரணமாக திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் 10 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலை உச்சியில் சிக்கித் தவிக்கின்றனர். கலெக்டர், எஸ்பி தலைமையில் குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி மலை உச்சியில் சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு ஒவ்வொரு அமாவாசை, பவுர்ணமி மற்றும் முக்கிய நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். வைகாசி அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினத்திலிருந்து பக்தர்கள் திரளாக இங்கு குவியத் தொடங்கினர். கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

கடந்த சில தினங்களாக இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் சுந்தரமகாலிங்கம் கோயிலில் இருந்து தாணிப்பாறை வரை ஓடைகளில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதனால் காட்டாற்று வெள்ளம் ஏற்படலாம் என பக்தர்களுக்கு தீயணைப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், நேற்று பகல் 1 மணியளவில், சுந்தரமகாலிங்கம் கோயில் பகுதியில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழை வலுக்கத் தொடங்கியது. மழையை பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கு ஏறிக் கொண்டிருந்தனர். கன மழை காரணமாக, திடீரென காட்டாற்று வெள்ளம் வந்ததால் பக்தர்கள் ஆங்காங்கே திகைத்து நின்றனர். பெண்கள், குழந்தைகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைப்பாதையில் ஆங்காங்கே சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்து சாத்தூர், வத்திராயிருப்பு வனச்சரகத்தைச் சேர்ந்த வன ஊழியர்கள் விரைந்து வந்து பக்தர்களை கயிறு கட்டி மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மலையில் சிக்கியிருந்த பக்தர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்ததால் அனைவரையும் உடனடியாக மீட்க முடியவில்லை.

இதற்கிடையே, தாணிப்பாறை மலை அடிவாரத்தில் உள்ள ஓடையில் குளித்துக் கொண்டிருந்த சிலரை, திடீர் காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்றது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே வசிக்கும் சரவணன் (26), தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த உதயா (26), வத்திராயிருப்பைச் சேர்ந்த பொன்ராஜ் (17) எனத் தெரிய வந்தது. பொன்ராஜின் உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். இவர்கள் தவிர, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 7 பேரின் கதி என்ன என தெரியவில்லை. விருதுநகர், திருவில்லிபுத்தூர் பகுதி தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் அங்கு மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். சங்கிலி கருப்பசாமி கோயில் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கயிறு கட்டி மீட்கப்பட்ட நிலையில், மலை உச்சியில் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடாரத்தில் தங்கியிருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பக்தர்கள் சிலர் மரக்கிளைகளைப் பிடித்து ஆங்காங்கே தொங்கிக் கொண்டு நின்றனர். அவர்களையும் தீயணைப்புப் படையினர் மீட்டனர். வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரக ஊழியர்கள், தணிப்பாறையிலிருந்து வண்டிப்பனை செல்லும் வழியில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்களை மீட்டனர். தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மீட்புக்குழுவினர் தொடர்ந்து முகாமிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உடல் மீட்பு

தாணிப்பாறையில் குளித்தபோது இறந்த பொன்ராஜ் நண்பர்களுடன் சதுரகிரிக்குச் சென்றார். குளித்து முடித்த பின் பாறையில் வைத்திருந்த தனது உடையை எடுத்துக் கொண்டு புறப்பட்டபோது காட்டாற்று வெள்ளம் இவரை அடித்துச் சென்றது. இவரது உடலை மீட்புக் குழுவினர் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொன்ராஜின் நண்பர் பாஸ்கரனை (17) தேடி வருகின்றனர்.

மாரடைப்பால் ஒருவர் சாவு

சதுரகிரி மலைப்பகுதியில் காலையில் வெயில் கடுமையாக அடித்தது. இதனால், மழை வரும் என பக்தர்கள் எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராத நேரத்தில் கனமழை கொட்டி காட்டாற்று வெள்ளம் வந்ததால் பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். அமாவாசை நாளில் வழக்கமாக போலீஸ் பாதுகாப்பு போடப்படும். ஆனால், நேற்று அமாவாசை நாளில் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை என்று பக்தர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, மலைக்கு வந்திருந்த வெளியூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தள்ளது. அவரது பெயர் விவரம் தெரியவில்லை.

குடும்பத்துடன் தப்பிய பக்தர்

நெல்லை மாவட்டம், பழவூரைச் சேர்ந்தவர் காந்தி. காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இவர், ஒருவழியாக அங்கிருந்து தப்பி வந்தார். இவர் கூறுகையில், ‘‘சதுரகிரி மலைக்கு உறவினர்கள் உள்பட குடும்பத்துடன் வந்தேன். 30 ஆண்டுகளுக்குப் பின் கோடைகாலத்தில் சதுரகிரி மலையில் மிகப்பெரிய காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் நான் சிக்கிக்கொண்டேன். ஒரு பகுதியில் 4 பேரை வெள்ளம் இழுத்துச் சென்றதை நேரில் பார்த்தேன். அவர்களின் கதி என்ன ஆனது தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக குடும்பத்துடன் தப்பி வந்துவிட்டேன். மழை தொடர்ந்து பெய்வதால் மலையிலிருந்து மிகவும் சிரமப்பட்டு இறங்கி வருகிறேன்,’’ என்றார்.

38 ஆண்டுக்குப் பின் காட்டாற்று வெள்ளம்

1977ம் ஆண்டு ஆடி அமாவாசையின் போது சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். அதற்குப் பின் இந்த ஆண்டு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓடையை கடக்க தடை

சதுரகிரி மலையிலிருந்து இறங்கி சுமார் 1,500 பக்தர்கள் நேற்றுமாலை ஓடையைக் கடக்க முயன்றனர். அப்போது ஓடையைக் கடக்க வேண்டாம் என்றும் திடீரென காட்டாற்று வெள்ளம் வரும் என்பதால் மலைக்கு மேலே கோயிலுக்கே செல்லுமாறும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து பக்தர்கள் அனைவரும் மீண்டும் மலையேறி கோயிலுக்கே சென்றனர்.

-http://www.dinakaran.com

TAGS: