அரியானாவில் கைது – ரூ. 20 கோடி செம்மரங்கள் பறிமுதல்

semmaramஹைதராபாத்: அரியானா மாநிலத்தில் சர்வதேச கடத்தல் மன்னனை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அளித்த தகவலின் பேரில் ரூ. 20 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த மாதம் செம்மரங்களைக் கடத்தியதாக ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்.

அதனைத் தொடர்ந்து செம்மரக்கடத்தல்காரர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை ஆந்திர அரசு தீவிரப் படுத்தியுள்ளது. இந்த வழகில் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் மஸ்தான் வலி, நடிகை நீத்து அகர்வால், தமிழ் நடிகர் சரவணன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

நீத்து அகர்வாலின் வங்கிக் கணக்கு மூலம் செம்மரக்கடத்தலில் தொடர்புடைய மேலும் பலரது விவரங்கள் கண்டுபிடிக்கப் பட்டன.

இந்நிலையில், ராயலசீமா வனப்பகுதியில் உள்ள செம்மரங்களை வெட்டி கடத்தும் ஏஜெண்டுகளுடன் தொடர்புடைய கடத்தல்காரர்கள் ஆந்திரா, அரியானா மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதில் முக்கிய குற்றவாளியான சர்வதேச கடத்தல்மன்னன் முகேஷ் பதானி என்பவரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். தீவிர விசாரணையில் முகேஷ் அரியானா மாநிலத்தின் சார் பகுதியில் மறைந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அங்கு சென்ற ஆந்திர போலீசார் நேற்று முன்தினம் முகேஷ் பதானியை கைது செய்தனர். பின்னர் அவரை ஆந்திராவுக்கு பிடித்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

முகேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடப்பா பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த ரூ.20 கோடி மதிப்புள்ள செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முகேஷ் பதானியுடன் தொடர்புடைய சீனாவை சேர்ந்த செம்மர வியாபாரி யங் பிங் கடந்த வாரம் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: