சென்னை மெரீனாவில் தமிழினப் படுகொலை நினைவேந்தல்! ஏராளமானோர் திரண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

இலங்கையில் தமிழினப் படுகொலை இடம்பெற்றதனை நினைவு கூர்ந்து நினைவேந்தல் கூட்டம் சென்னை மெரீனாக் கடற்கரையில் 17.05.2015 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது.

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இவ் நினைவேந்தலில் பங்கேற்ற ஏராளமான தமிழ் மக்கள் மெழுகுவர்த்திகளை ஏந்தி படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் பங்கேற்ற தமிழர்கள் “சமரசமில்லை… சமரசமில்லை… ஒரே தீர்வு ஈழ விடுதலை” போன்ற கோஷங்களை தொடர்ந்து பலமாக எழுப்பினர்.  விசேடமாக பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் பெரிய தீபத்தை வைகோ ஏற்றி வைத்தார்.

தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், இனப்படுகொலை நடைபெற்றது தொடர்பாக இந்தியா, இலங்கை, அமெரிக்கா, இங்கிலாந்து மீது விசாரணை நடத்த வேண்டும் என  என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

ஏராளமான தமிழின உணர்வாளர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில் போரில் உயிர் நீத்த உறவுகளுக்கு தீப அஞ்சலியும், மலரஞ்சலியும் இடம்பெற்றது.

நிகழ்வில் பங்கேற்ற வைகோ உரையாற்றுகையில்,

எங்கள் இருதயங்களில் இருந்து குருதி கொட்டுகிறது. ஈழப் போரின் இறுதி நாட்களில் பச்சிளம் பாலகர்கள், தாய்மார்கள், வயதானவர்கள் என்று எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டார்கள். ஒரு இனத்தையே கருவறுப்பதற்காக நிகழ்ந்த படுகொலைகள் தான் இவை. ஐ.நா மனிதவுரிமைக் கவுன்சிலிலும் நீதி புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எங்களுக்கு ஒரே தீர்வு தான் வேண்டும். அது சுதந்திர தமிழீழம் மட்டுமே. இனப்படுகொலைக்கு நியாயம் வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். முத்துக்குமார் உட்பட 19 பேர் ஈழத் தமிழர்களுக்காக மடிந்தும் நீதி கிடைக்கவில்லை. என்றார்.

-http://www.dinamani.com

TAGS: