சுதந்திர போராட்டத்தில் தீவிரவாதத்தை கடைப்பிடித்த பகத்சிங் மற்றும் அவரின் சகாக்கள் இருவருக்கும் வெள்ளைக்கார அரசின் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.
தண்டனை தந்த நீதிபதியைப் பார்த்து அவர்கள் சொன்னார்கள்…
“”நீங்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரர். தூக்குத் தண்டனையை புன்னகையோடு ஏற்கும் வீரர்களை காணும் பாக்யம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது”’’
பாலு என்கிற பாலுச்சாமியை தூக்கிலிடப் போகும் அந்த இறுதிக் காட்சியில், புத்தகத்தில் படித்த பகத்சிங்கின் அலட்சியச் சிரிப்பை பார்க்க முடிந்தது பாலுவிடம்.
பாலு…. மக்களுக்காக போராடும் நக்ஸல் இயக்கத் தலைவர். அவரை தூக்கிலிட்டு சட்டத்தின் வலிமையை நிறைவேற்றத் துடிக்கும் கடமை தவறாத போலீஸ் அதிகாரி மெக்காலே. பாலுவை தூக்கிலிடப்போகும் “ஹேங்மேன்’’எமலிங்கம், பாலுவை சிறையிலிருந்து மீட்கத்துடிக்கும் தீவிரவாத இயக்கத்தின் வீராங்கனை குயிலி. இந்த நால்வரின் மனப் போராட்டத்தை வைத்து பெரும் பேராண்மையுடன் எஸ்.பி.ஜனநாதன் இயக்கியிருக்கும் படம் ‘”புறம்போக்கு என்கிற பொதுவுடமை.’
ஊரின் பொதுப்பயன்பாட்டிற்கு உள்ள இடத்திற்குப் பெயர்தான் புறம்போக்கு. உதாரணத்திற்கு… ஊரின் நீர்த் தேவைக்காக… ஊர் உண்ணும் நீர்நிலைதான் ஊருணி. ஆனால் சுயநலக்காரர்கள் அங்கே மண்ணைக்கொட்டி ஆக்கிரமிப்பதால்… “புறம்போக்கு’’என்பதே கேள்விகேட்பார் இல்லா இடம்… ஆக்கிரமிப்பதற்கான இடம் என இன்று அர்த்தப்பட்டிருக்கிறது. மக்களின் நன்மைக்காக… வர்க்கபேதம் ஒழிப்பதற்காக போராடும் ஒரு பொதுவுடமைத் தலைவனை, சுயநலவாதிகளின் மனநிலையில் புறம்போக்காக நினைத்து… சட்டம் ஆக்கிரமித்து அழிப்பதால்தான் “புறம்போக்கு’’என்கிற சொல்லை குறியீடாக இந்தப் படத்திற்கு தலைப்பாக்கியிருக்கிறார் எஸ்.பி.ஜனநாதன்.
பொதுவுடமைப் போராளிக்குழுவின் இளம் தலைவனாக ஆர்யா, பாத்திரம் உணர்ந்து துடிப்பும், பாந்தமும் நிறைந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தூக்குமேடை யில் நிறுத்தப் பட்ட நிலையில்… “உங்களைக் காப்பாற்ற கீழே எல்லா பிளானும் ரெடி’’என்பதை, புன்னகையுடன் கண் ணடித்து வெளிப்படுத்துகிறார் தூக்கிலிடும் தொழிலாளி. “அந்த பிளான் போலீஸ் அதிகாரியால் தோற்கடிக்கப்பட்டு விட்டது. தனது மரணம் உறுதியான ஒன்று’ எனத் தெரிந்தும், எமலிங்கத்தின் உற்சாகத்திற்கு பதில் உற்சாகம் காட்டும் இடத்தில் ஆர்யா நடிப்பில் உயர்ந்து நிற்கிறார்.
சிறைக் கைதிகள் உண்ணும் அச்சடித்த சோற்றையே தானும் உண்ணுவது, சிறைக் கைதிகளின்மேல் மதிப்புக் கொள்வது, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக செவி சாய்ப்பது, அதே சமயம், பாலுவை தூக்கிலிடும் கடமையில் துளியும் தவறாமல் மிடுக்கு காட்டுவது… என நிஜ அதிகாரியின் பிரதியாகவே தோன்றியிருக்கிறார் ஷாம்.
வாழ்க்கையின் சகல ரகளையும் நிகழ்த்தும் அடித்தட்டு மனிதனாக இருந்தாலும், தூக்கிலிடுவதன் மூலம் ஒரு உயிரைப் பறிக்க அஞ்சும் குணாதிசயத்தை பிரதிபலிப்பதாகட் டும், பாலு மக்களுக்கு நன்மை செய்த தலைவர் எனத் தெரிந்து, அவரை தப்பிக்கவைத்து காப்பாற்ற துடிக்கும் இடமாகட்டும், காப்பாற்றுவதற்காகத்தானே பாலுவை தூக்கிலிடுகிறோம்’ என உற்சாகப்படுமிடமாகட்டும்… எமலிங்கமாக நடிப்பில் விஸ்வரூபமெடுத்திருக்கிறார் விஜய்சேதுபதி.
இந்தியாவின் முதல் மனித வெடிகுண்டு என வரலாறு சொல்லும், சிவகங்கை வேலுநாச்சியாரின் போர்ப்படை வீராங்கனையான குயிலி, தன் உடலில் வெடி மருந்து களைக் கட்டிக்கொண்டு, வெள்ளையர்களின் ஆயுதக் கிடங்கை அழித்து தன் உயிரைத் தியாகம் செய்தாள். அப்படியான அம்சங்கள் நிறைந்த ‘குயிலி’ பாத்திரம் என்பதால் கார்த்திகா நடிப்பிலும் ஆண்மையின் கம்பீரம் காணமுடிகிறது. ஆயினும் “குயிலி பெண்தான்’’என்பதை பிரதிபலிப்பதுபோல் பெண்ணுக்குரிய இரக்க சுபாவமாக… ரிமோட்டை இயக்க மறுக்கும் காட்சியில் அதற்கேற்ற நடிப்பைத் தந்திருக்கிறார் கார்த்திகா.
தூக்குத் தண்டனைக்கு எதிரான சமூகத்தின் மனநிலையை அரசும், சட்டமும் ‘பைத்தியக்கார மனநிலையாக பார்க்கிறது’ என்பதை… இறுதிக் காட்சியில் சமூகத்தின் பிரதிபிம்பமாக, அதன் நிழலாக விஜய்சேதுபதியைக் காண்பித்து… முடிகிறது படம்.
“இயற்கை’’படத்தில் கப்பலையும், “ஈ’’படத்தில் விஞ்ஞானக்கூடத்தையும், “பேராண்மை’யில் ஏவுகணை யையும்… உயிர்ப்பான கதாபாத்திரமாக்கியதுபோல, “புறம்போக்கு என்கிற பொதுவுடமை’யில் சிறைச் சாலையை ஜீவனாக்கியிருக்கிறார் ஜனநாதன். ஜெயில் செட் போட்டு மிரட்டியிருக்கிறார் ஆர்ட் டைரக்டர் செல்வக்குமார். ஏகாம்பரத்தின் கேமராவும், ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசையும், சிறைச்சாலைக்குள் பதட்டத்துடனும், பரபரப்புடனும் பார்வையாளனை நிறுத்தியிருக்கிறது. எந்த சித்தாந்தமும் தெரியாத ஒரு சராசரி பார்வையாளனும் பார்த்து ரசிக்கிற படமாக, இதயத்தை ஆக்கிரமிக்கிறது இந்தப் புறம்போக்கு.
காதல், மோதல், கண்ணீர், செண்ட்டிமெண்ட், நியாயம், ஆள்மாறாட்டம், எதிர்பாராத திருப்பம், திகில், சட்டம், கோர்ட், அரசியல், போலீஸ், சிறை, நகைச்சுவை, குடிபோதை, குத்துப்பாட்டு… இப்படி கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்தது வழக்கமான படம்.
அந்த கமர்ஷியல் அம்சங்களை வைத்துக்கொண்டு, அதே சுவாரஸ்யத்துடன் கொள்கைப் படம் தந்திருக்கிற ஜனாவுக்கு ஒரு சலாம்.
-இரா.த.சக்திவேல்
-http://www.nakkheeran.in