புதுடெல்லி: பிரதமர் மோடியின் ஓராண்டு ஆட்சியில் இறைச்சி ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் கூறுகையில், பிரதமர் மோடி பதவியேற்ற ஓராண்டில் மட்டும் வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி 15 சதவீதம் அதிகரித்துள்ளது. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் பாகிஸ்தானுக்கு ஓட வேண்டும் என்று மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி பேசுகிறார்.
தற்போது இந்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் மவுனம் காப்பது ஏன்? கடந்த காலத்தில் பாஜ எதிர்கட்சியாக இருந்த போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இறைச்சி ஏற்றுமதி தொடர்பாக பாஜ விமர்சனம் செய்தது. தற்போது மற்றவர்களுக்கு பசுவதைக்கு எதிராக பிரசாரம் செய்து விட்டு மிகப் பெரிய அளவில் மாட்டிறைச்சியை மத்திய அரசு ஏற்றுமதி செய்துள்ளதே? இதை பற்றி பாஜ, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பின் தலைவர்களான அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் மவுனம் காப்பது ஏன்? மோடி அரசு ஒரு பல்டி அரசு என்பது நன்றாக தெரிந்துவிட்டது. உதாரணத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு ஆதரவாக இருந்து விட்டு தற்போது அதே சட்டத்திற்கு எதிராக புதிய சட்டத்தை கொண்டுவர பாஜவினர் முயற்சி செய்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
-http://www.dinakaran.com

























