முசோரி: நாடு முழுவதும் வீசும் அனல் காற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 335ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6500 அடி உயரத்திலிருக்கும் மலைவாச தளமான முசோரியில் கூட வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாக உயர்ந்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.
உத்திரப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெப்பநிலை 50 டிகிரியை நெருங்குவதால் அங்குள்ள மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அலகாபாத், வாரணாசி உள்ளிட்ட நகரங்களில் 47 டிகிரி வெப்பத்தால் ஏற்பட்ட அனல் காற்றால் 120 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மிருககாட்சி சாலையில் கொடும் சூட்டிலிருந்து மிருகங்களை காப்பாற்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நீரிழப்பால் விலங்குகள் பாதிக்கபடுவதை தடுக்க அவற்றுக்கு குளுக்கோஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பறவைகளுக்கு குளிர்ச்சியான பழங்கள் உணவாக அளிக்கப்பட்டு வருகிறது.
தென்னிந்திய மாநிலங்களிலும் அனல் சுட்டெரிக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா நேற்று ஒரே நாளில் கடும் வெப்பத்திற்கு 135 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த மாநிலங்களில் வழக்கத்தைவிட வெப்பம் 7 டிகிரி உயர்ந்து காணப்படுவதால் மக்கள் வெளியே வர பயந்து வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். கம்பம் நகரில் அதிகபட்சமாக 48 டிகிரி வெப்பநிலை பதிவானது. கடந்த 1947ம் ஆண்டில் பதிவான 47.2 டிகிரியே இதுவரை அங்கு பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
-http://www.dinakaran.com

























