மோடியின் ஓராண்டு ஆட்சியில் பெரிய முதலீடுகள் எதுவும் இல்லை: சிஐஐ

modi_gandhi_001பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஓராண்டு கால ஆட்சியில், பெரிய அளவிலான முதலீடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்று, இந்தியத் தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவர் சுமித் மஜும்தார் தெரிவித்தார்.
மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து தில்லியில் அவர் கூறியதாவது:
தொழில் தொடங்க எளிமையான சூழலை உருவாக்கும் சிறந்த 50 நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
அதேவேளையில், இந்தியாவில் எளிமையாக தொழில் தொடங்குவதற்கும், வர்த்தகம் மேற்கொள்வதற்கும் உகந்த சூழலை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இதற்கு முன்பு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்தியாவில் தொழில் தொடங்கினர். ஆனால், வர்த்தகம் மேற்கொள்வதற்கான சூழல் எளிமையாக இல்லாததால், மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திரும்பச் சென்றுவிட்டனர்.
எனவே, வர்த்தகம் மேற்கொள்வதற்கான சூழலை எளிமைப்படுத்தும் வரை, பெரிய முதலீடுகளை எதிர்பார்க்க முடியாது. தொழில் தொடங்கும்போது உள்ள கடினமான நடைமுறைகளை சுலபமாக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் உள்பட ஏராளமான நடைமுறைகள், விரைவில் கணினிமயமாக்கப்பட வேண்டும். வர்த்தக சூழலை எளிமைப்படுத்துவதற்கான பல்வேறு புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வது அவசியம்.
இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் எப்போது தீர்க்கப்படும் என்பது தெரியாது. ஆனால், இந்த நிதியாண்டின் மூன்றாவது அல்லது நாலாவது காலாண்டில் முதலீடுகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
அதேவேளையில், தொழில் தொடங்குவதற்கான சூழலை எளிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைய இரு ஆண்டுகள் ஆகலாம் எனத் தெரிகிறது. கடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால்தான் இதற்கு முன்பு முதலீடுகள் குறைந்தது என்று உறுதியாகக் கூற முடியாது. முந்தைய ஆட்சியின் மீது இருந்த அவநம்பிக்கை காரணமாகவும் முதலீடுகள் குறைந்தன என்று அவர் தெரிவித்தார்.

-http://www.dinamani.com

TAGS: