ஆளுநரை பதவி நீக்கம் செய்யும் வகையிலான அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி டெல்லி சட்டசபையில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அரசு அதிரடி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே அதிகார போட்டி நிலவி வருகிறது. இதில் அதிகாரிகள் நியமனம், பொது ஒழுங்கு, போலீஸ் உள்ளிட்டவற்றில் டெல்லி ஆளுநருக்குத்தான் அதிகாரம் உண்டு என்று மத்திய அரசு கடந்த 21-ந் தேதி அறிவித்து, இது தொடர்பாக அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த அறிவிக்கைக்கு கேஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில், அனில்குமார் என்ற போலீஸ் ஏட்டு லஞ்ச வழக்கில் கைதாகி கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
அவருக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், டெல்லி அரசின் கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, போலீசாரை கைது செய்கிற அதிகாரம் உண்டு என கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அந்த தீர்ப்பில் மத்திய அரசு, டெல்லி மாநில அரசு மற்றும் துணை நிலை ஆளுநர் ஆகியோரின் அதிகார வரம்பு குறித்து ஆராயப்பட்டுள்ளது. தீர்ப்பில், மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப்பட்டியலின்படி, சட்டங்களை இயற்றுகிற அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு, குற்றவியல் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றில் துணை நிலை ஆளுநர் தன் விருப்பம் போல செயல்பட முடியாது.
அமைச்சரவையின் ஆலோசனையின்படிதான் செயல்பட முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இந்த தீர்ப்பு தொடர்பாக துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை முதல்வர் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, தலைமை செயலாளர் கே.கே.சர்மா ஆகியோருடன் சென்று நேற்று காலை சந்தித்தார்.
இந்த சந்திப்பு 20 நிமிடம் நடந்தது. இருவருக்கும் இடையே மோதல் போக்கு வெடித்த நிலையில் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை கேஜ்ரிவால் சந்தித்தது இதுவே முதல் முறை ஆகும். இதைத் தொடர்ந்து டெல்லி சட்டசபையின் 2 நாள் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
இக் கூட்டத்தில், துணை ஆளுநர் கவர்னர் நஜீப் ஜீப் ஜங்கை பதவி நீக்கம் செய்ய அரசியல் சாசன சட்டத்தின் 155-வது பிரிவில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரி அதிரடி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் ஆதர்ஷ் சாஸ்திரி கொண்டு வந்தார். ஆனால் இது அரசியல் சாசன நெருக்கடியை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டசபையில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு எதிராக துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றொரு தீர்மானம் கொண்டு வந்தார். இத்தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட உள்ளது.