கொச்சி: பேஸ்மேக்கர், மூட்டு சிகிச்சை கருவி மற்றும் செயற்கை வால்வுகள் ஆகியவற்றையும் மருந்து விலை கட்டுப்பாட்டு ஆர்டர் (டிபிசிஓ) திட்டத்தின்கீழ் கொண்டு வந்து, மருந்து மாஃபியாக்களின் ஆதிக்கத்தை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உரம் மற்றும் மருந்துத்துறை அமைச்சர் ஆனந்த்குமார் தெரிவித்தார்.
கொச்சியில் நடந்த மோடி அரசின் முதலாமாண்டு சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆனந்த்குமார் மேலும் கூறியதாவது: மருந்து மாஃபியாக்கள், அத்தியாவசிய மருந்து பொருட்கள், உபகரணங்களின் விலையை இஷ்டத்துக்கு ஏற்றி செய்துவரும் அட்டூழிகளை அடக்க நரேந்திரமோடி அரசு முடிவு செய்துள்ளது. அரசு தனது நடவடிக்கையை தொடங்கிவிட்டது.
இதய நோயாளிகள் பயன்படுத்தும் பேஸ்மேக்கர்கள், செயற்கை வால்வு மற்றும் மூட்டு அறுவையின்போது உள்ளே வைக்கப்படும் உபகரணங்கள் ஆகியவற்றின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவற்றை மருந்து விலை கட்டுப்பாட்டு ஆர்டர் திட்டத்தின்கீழ் கொண்டுவர உள்ளோம்.
ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கூட, ரூ.60 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விலை வைத்து விற்பனை செய்ய இந்த மாஃபியாக்களால் முடிகிறது. இதற்கு அரசு முடிவு கட்டும். நாடு முழுவதும் மலிவுவிலை மருந்தகங்கள் கொண்டுவரப்படும். இவ்வாறு அனந்த்குமார் தெரிவித்தார்.