செம்மரக்கடத்தலில் லட்சக்கணக்கில் பணம் புரண்டதால் வேலூர் கலால் பிரிவு பொலிஸ் டி.எஸ்.பி. தங்கவேலு செம்மரக்கடத்தல் கும்பலின் கூட்டாளியாக மாறியது தெரியவந்துள்ளது.
ஆம்பூர் அடுத்த பாலூரை சேர்ந்த பா.ம.க. பிரமுகர் சின்னபையன் செம்மரக் கடத்தல் சம்பவத்தில் கடந்த 26ம் திகதி கொலை செய்யப்பட்டார்.
சின்னபையன் பதுக்கி வைத்திருந்த 7 டன் எடையுள்ள செம்மரக்கட்டைகளை வேலூர் கலால் பிரிவு பொலிஸ் டி.எஸ்.பி. தங்கவேலு மிரட்டி பறித்து சென்றுள்ளார்.
இந்த கொலை தொடர்பாக திருமலை குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் (33), கண்ணமங்கலம் இருமுடி புலியூரை சேர்ந்த பெருமாள் (27), தங்கராஜ் (25), சத்தியமூர்த்தி (27) ஆகிய 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அலமேலு மங்காபுரத்தை சேர்ந்த கணவன்–மனைவியான நாகேந்திரன் (42), ஜோதி லட்சுமி (40) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொடுத்த தகவலின்படி டி.எஸ்.பி. தங்கவேல் மற்றும் கலால் துறை ஏட்டுகள் சவுந்தர் ராஜன், சாமுவேல், ஓட்டுனர்கள் ராஜேஷ், சீனிவாசன் ஆகியோரும் செம்மர கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
டி.எஸ்.பி. கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்று சாராய வேட்டைக்கு சென்ற போது சத்துவாச்சாரி நாகேந்திரன் வீட்டில் செம்மரம் பதுக்கி வைத்திருக்கும் தகவல் கிடைத்தது.
அவரது வீட்டில் தங்கவேலு நடத்திய ரகசிய பேரத்தின் முடிவில் வீட்டில் இருந்த செம்மரக் கட்டைகளை விற்று கிடைத்த பணத்தில் பெரும் தொகையை தங்கவேலுக்கு நாகேந்திரன் கொடுத்துள்ளார்.
இதற்கிடையில் சின்ன பையன் பதுக்கிய 7 டன் செம்மரக்கட்டைகளை ஆளுக்கு பாதியாக பிரித்து கொள்ள முடிவு செய்து, கடந்த 25ம் திகதி சின்னபையனை மிரட்டி செம்மரக் கட்டைகளை கடத்தி சென்றுள்ளார்.
செம்மரக் கடத்தலில் அதிக பணம் கிடைத்ததால் டி.எஸ்.பி. தங்கவேலு கடத்தல் கும்பலுடன் சேர்ந்து பங்குதாரராக மாறியுள்ளார்.
செம்மரக் கடத்தல் வழக்கில் கூட்டுச்சதி செம்மரங்களை மிரட்டி கடத்தியது, மோசடி, பாதுகாக்கப்பட்ட பட்டியல் இன மரங்களை கடத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ஆம்பூர் தாலுகா பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் மூன்றாவது நபராக டி.எஸ்.பி. தங்கவேலு மீது குற்றம் சாட்டுப்பட்டுள்ளது.
இதற்கிடையே டி.எஸ்.பி. தங்கவேலு கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக முன்ஜாமீன் பெற சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அவர் தற்போது அரசியல் பிரமுகர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-http://www.newindianews.com