சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா மேல்முறையீடு: தலைவர்கள் வரவேற்பு!

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளதை கட்சி தலைவர்கள் சிலர் வரவேற்றுள்ளனர்.
 

இரண்டாம் இணைப்பு:

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் வரவேற்பு:jaya_003

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதென கர்நாடக அரசு எடுத்திருக்கும் முடிவை வரவேற்கிறேன்.

மேல்முறையீடு செய்வதற்கு 90 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் 20 நாட்களிலேயே மிக விரைவாக இந்த முடிவை எடுத்த கர்நாடக அரசை பாராட்டுகிறேன்.

விசாரணை நீதிமன்றம் ஜெயலலிதா மற்றும் மூவருக்கு வழங்கிய தண்டனையை உயர்நீதிமன்றம் முழுமையாக ரத்து செய்திருக்கிறது.

இத்தகைய இரு வேறுபட்ட தீர்ப்புகளுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் தான் இறுதியாக நீதி கிடைக்கும்.

உச்சநீதிமன்றம் எந்த அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் தீர்ப்பை வழங்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

பாமக நிறுவனர் ராமதாஸ் இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது சற்று தாமதிக்கப்பட்ட முடிவு என்றாலும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

இதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமய்யா, தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு திருத்தப்பட வேண்டிய தீர்ப்பு என்பதை தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறேன்.

தீர்ப்பு வெளியான சில நாட்களிலேயே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தால், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காகத் தடை விதிக்கப்பட்டு ஜெயலலிதா முதலமைச்சராவது தடுக்கப்பட்டிருக்கலாம்.

எனினும், இப்போதாவது இந்த முடிவை கர்நாடக அரசு எடுத்திருப்பதன் மூலம் கர்நாடக அரசு மீது உச்ச நீதிமன்றம் கொண்டிருந்த நம்பிக்கையும் முழுமையாக காப்பாற்றப்பட்டிருக்கிறது.

தவறாக அளிக்கப்பட்ட தீர்ப்பின் பயனாக ஒருவர் மீண்டும் முதலமைச்சராகி, ஊழல்களையும், முறைகேடுகளையும் அரங்கேற்றுவதை அனுமதிப்பது மிகப்பெரிய அநீதி ஆகும்.

மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு விரைந்து தாக்கல் செய்ய வேண்டும்.

உயர் நீதிமன்ற தீர்ப்பில் ஏராளமான குளறுபடிகளும், தவறுகளும் இருப்பது அப்பட்டமாக தெரிவதால் அதைக் காட்டி, நீதிபதி குமாரசாமி தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கும்படி உச்ச நீதிமன்றத்தைக் கோர வேண்டும்.

இவ்வழக்கின் அனைத்து நுணுக்கங்களையும் அறிந்தவர் ஆச்சார்யா தான் என்பதால், அவரையே இந்த வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

முதல் இணைப்பு:

கர்நாடக முதல்வர் சித்தராமய்யா தலைமையில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய சட்டத் துறை அமைச்சர் ஜெயச்சந்திரா, சொத்துக் குவிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகளை கர்நாடக அரசு செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பெங்களுரூ சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டணை விதித்து உத்தரவிட்டது.

பின்னர் நடந்த மேல்முறையீட்டில், கர்நாடக உயர் நீதிமன்றம் மே 11ம் திகதி அன்று, 4 ஆண்டு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து கடந்த மே 23ம் திகதி, தமிழக முதல்வராக அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா 5வது முறையாக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பில் கணக்கியல் தவறுகள் இருப்பதை கண்டறிந்த எதிர்க் கட்சிகள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தினர்.

மேலும் ஜெயலலிதா வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான ஆச்சார்யா மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசை வலியுறுத்தியிருந்தார்.

தற்போது அனைத்து தரப்பு கோரிக்கையை ஏற்று மேல்முறையீட்டுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

www.tamilwin.com

TAGS: