ஜெயலலிதா வழக்கில் மேன்முறையீடு: கர்நாடக அரசு அதிரடி முடிவு! முதல்வர் பதவிக்கு சிக்கல்?

jaya2சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

பெங்களூருவில் இன்று நடைபெற்ற கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதமும் ரத்து செய்யப்பட்டது.

இந்த தீர்ப்பில் கணக்கு பிழை இருப்பதாக கூறி, தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, மேல்முறையீடு குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இது மிகவும் முக்கியமான வழக்கு என்பதால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு அண்மையில் பரிந்துரை கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்நிலையில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

இருப்பினும் எந்த தேதியில் மேல்முறையீடு செய்வது என்பது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என கர்நாடக சட்டத் துறை அமைச்சர் ஜெயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசின் இந்த முடிவு ஜெயலலிதா மற்றும் அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மேன்முறையீடு: உச்ச நீதிமன்றம் தடை விதித்தால் ஜெயலலிதாவுக்கு சிக்கல்?

ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் போது, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தால், அவர் வகித்து வரும் முதல்வர் பதவிக்கு பாதிப்பு ஏற்படும் என்று வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மேன்முறையீடு செய்வது என்று கர்நாடக அமைச்சரவை இன்று முடிவு செய்தது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து இவ்வழக்கில் கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜரான ஆச்சார்யா அளித்துள்ள பேட்டியில், சொத்துக் குவிப்பு வழக்கின் மேன்முறையீட்டின் போது, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோர முடியும் என கூறியுள்ளார்.

அவ்வாறு உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுவித்து வழங்கிய தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தால், ஜெயலலிதா மீண்டும் பதவி இழக்கும் நிலை ஏற்படும் என்றும், கர்நாடக அரசு உத்தரவிட்டால் இவ்வழக்கில் ஆஜராக தயார் என்றும் ஆச்சார்யா விருப்பம் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: