மேகி நூடுல்ஸுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்: அன்புமணி

Anbumani-Ramadossநச்சுப் பொருட்கள் அதிகமாக இருக்கும் மேகி நூடுல்ஸுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து  அவர் வெளியிட்ட அறிக்கையில், சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் மேகி நூடுல்சில் காரீயம் அளவுக்கு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், குழந்தைகள் அறவே தவிர்க்க வேண்டிய அஜினமோட்டோ எனப்படும் MSG (monosodium glutamate) நச்சுப்பொருளும் மேகி நூடுல்ஸில் இருப்பதாக கண்டறிந்துள்ளார்கள்.

வெளிநாடுகளில் விற்கப்படும் மேகி நூடுல்ஸில் இந்த நச்சுகள் இல்லை. ஆனால், இந்தியக் குழந்தைகளுக்கு மட்டும் பன்னாட்டு கம்பெனிகள் இப்படி நச்சு உணவை விற்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பொட்டலங்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுப்பொருட்களின் (packaged food) தரத்தை உறுதிப்படுத்த, உணவுப்பாதுகாப்பு சட்டத்திருத்தத்தை, நான் நலவாழ்வு அமைச்சராக இருந்த போது கொண்டுவந்தேன்.

அந்தச் சட்டத்தின் கீழ், உத்தரப்பிரதேச அரசு, மேகி நூடுல்ஸில் நச்சுத்தன்மை இருப்பதைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. மேகி நூடுல்ஸை திரும்பப்பெற்றுக்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதன் விளம்பரங்களில் நடித்த பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

அரசுக் கடைகளில் மேகி நூடுல்ஸ் விற்க கேரள அரசு தடை விதித்துள்ளது. தில்லி அரசு மேகி நூடுல்ஸை பரிசோதனை செய்து, நச்சுத்தன்மையை உறுதிசெய்துள்ளது. வழக்கு பதிவு செய்வதுடன், தடை செய்யவும் ஆலோசனை செய்துவருகிறது.

கர்நாடகா, அரியானா, உத்தர்காண்ட், மராட்டிய மாநிலம் ஆகிய மாநிலங்கள் மேகி நூடுல்சினை பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளன. மேற்கு வங்க மாநிலம் அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளது. பீகார் மாநிலம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

மிக அதிக அளவில் மேகி நூடுல்ஸ் விற்கும் மாநிலமான தமிழ்நாட்டில் அரசாங்கம் அமைதி காக்காமல் உடனடியாக மேகி நூடுல்ஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகி நூடுல்சின் உண்மைத் தன்மையை முழுமையாக ஆய்வு நடந்த வேண்டும். அதற்கு முன் ‘ வருமுன் காக்கும்’ நடவடிக்கையாக தமிழ்நாட்டில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டில் விற்கப்படும் அனைத்து பெருநிறுவனங்களின், அனைத்து Junk food வகைகளையும் ஆய்வு செய்து, அவற்றின் நச்சுத்தன்மை அளவைக் கண்டறிய வேண்டும்.

தமிழக குழந்தைகளின் நலம் காக்க தமிழக அரசு உடனடியாக மேற்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

-http://www.dinamani.com

TAGS: