இந்தியாவுடன் எல்லை நடத்தை விதிகள் ஒப்பந்தம்: சீனா விருப்பம்

india_china_map_20121022இந்திய-சீன எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, இந்தியாவுடன் நடத்தை விதிகள் ஒப்பந்தம் மேற்கொள்ள சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்திய – சீன நாடுகளுக்கு இடையிலான ஆதிக்க எல்லைக் கோட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று சமீபத்திய சீனப் பயணத்தின்போது பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்த நிலையில், அதனை நிராகரிக்கும் வகையில் சீனா இவ்வாறு கூறியுள்ளது.

இது தொடர்பாக, சீன வெளியுறவுத் துறையின் ஆசிய நாடுகளுக்கான துணைத் தலைமை இயக்குநர் ஹுவாங் ஸிலியன், இந்தியாவைச் சேர்ந்த செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்தியா – சீனா இடையிலான ஆதிக்க எல்லைக் கோட்டை தெளிவுபடுத்த இரு நாடுகளும் கடந்த காலங்களில் அளித்த விளக்கங்கள் பிரச்னையை அதிகரிக்கும் வகையிலேயே அமைந்தன.

எல்லையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடாமல், அதனை ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும்.

இந்தியா-சீனா இடையிலான ஆதிக்க எல்லைக் கோட்டை தெளிவுபடுத்துவது, பேச்சுவார்த்தைக்கு உதவுவதாக இருக்க வேண்டும். மாறாக, முட்டுக்கட்டையாக அமையுமானால் வருங்காலத்தில் மேலும் சிக்கலாகிவிடும். எனவே, நாம் இதனை கவனத்துடன் அணுக வேண்டும்.

எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அதற்காக, நடத்தை விதிகள் ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும். இதற்கு இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

எல்லைக் கோட்டை தெளிவுபடுத்துவதற்கான முயற்சியை சீனா சில ஆண்டுகளுக்கு முன்பே மேற்கொண்டபோது நிலைமை மேலும் சிக்கலாகும் சூழல் ஏற்பட்டதால், முயற்சி கைவிடப்பட்டது. ஆகையால், எல்லை நடத்தை விதிகளை உருவாக்குவது அவசியம் என்றார் ஹுவாங் ஸிலியன்.

ஆதிக்க எல்லைக் கோட்டை தெளிவுபடுத்துவது தொடர்பாக, இந்தியா – சீனா இடையே இதுவரை 18 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

இதில், அருணாசலப் பிரதேச மாநிலத்தின் 2,000 கி.மீ. பரப்பளவு மட்டுமே சர்ச்சைக்குள்பட்டது என்று சீனா கூறி வருகிறது. எனினும், கடந்த 1962ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் ஆக்கிரமிக்கப்பட்ட 4,000 கி.மீ. பரப்பளவு குறித்தும் பேச்சுவார்த்தையின்போது இந்தியத் தரப்பு வலியுறுத்தி வருகிறது.

-http://www.dinamani.com

TAGS: