ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் யூலை மாதம் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என்று அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக கர்நாடக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.
அந்த அரசாணையில், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு விசாரணையில் அரசு வழக்கறிஞராக பி.வி. ஆச்சார்யாவும், அவருக்கு உதவி வழக்கறிஞராக சந்தேஷ் சவுட்டாவும் செயல்படுவார்கள்.
இந்த மேல்முறையீட்டு மனுவை தயாரிப்பது, தாக்கல் செய்வது உள்ளிட்ட பணிகளை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜோசப் ஹரிஸ்டாட்டில் கவனித்துக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா கூறுகையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு அரசாணை மிகவும் அவசியம்.
ஏனெனில், கடந்த காலத்தில் கர்நாடக அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறையாக அரசாணை வெளியிடாததை வைத்து, ஜெயலலிதா தரப்பினர் தேவையற்ற கால தாமதம் செய்தனர்.
மேல்முறையீடு செய்வது என்பது அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட பழிவாங்கல் முடிவு அல்ல. இது முழுக்க முழுக்க சட்ட ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு.
வரும் யூலை முதல் வாரத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும்.
ஜெயலலிதா தரப்பு ஒப்புக் கொண்ட சொத்துகளின்படி பார்த்தால், அவர்களது வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு 200 சதவீதத்தை விட அதிகமாக இருக்கும்.
எனவே ஜெயலலிதாவை நிரபராதி என எப்படி அறிவிக்க முடியும் என்பது போன்ற வாதங்களை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் வாதிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
-http://www.newindianews.com


























