பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அங்குள்ள ஹிந்துக்கள் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாகவும், இப்பிரச்னையைத் தீர்க்க மோடி தலையிட்டு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக வங்கதேச ஹிந்து, புத்த, கிறிஸ்தவ ஒற்றுமை மன்றத்தின் பொதுச் செயலாளர் ராணா தாஸ் குப்தா கூறியதாவது:
வங்கதேசத்தில் பிறந்து வளர்ந்த ஹிந்துக்களை, நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று பெரும்பான்மை மதத்தினரும், அடிப்படைவாதக் குழுக்களும் விரும்புகின்றன.
அடிப்படைவாதிகளால், எப்போது வேண்டுமானாலும் துன்புறுத்தப்படலாம் என்ற அச்சத்துடனேயே, ஹிந்துக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினத்தவரான ஹிந்துக்கள் மீது அடிப்படைவாதக் குழுக்கள் நடத்தும் தாக்குதலை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று பிரதமர் மோடி, உறுதியான செய்தியை தெரிவித்து விட்டுச் செல்ல வேண்டும் என்றார் அவர்.
இப்பிரச்னை குறித்து நாடக ஆர்வலர் பியூஷ் பந்தோபாத்யாய கூறுகையில், “சிறுபான்மையினர் சந்தித்துவரும் பிரச்னைகள் குறித்து வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன், மோடி பேச வேண்டும்’
என்றார்.
-http://www.dinamani.com