நடைமுறைக்கு வந்தது இந்திய-வங்கதேச எல்லை ஒப்பந்தம்

  • டாக்காவில் இந்திய-வங்கதேச வெளியுறவுச் செயலாளர்கள் இடையே நில எல்லை வரையறை ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பரிமாறி கொள்ளப்படுவதைப் பார்வையிடும் பிரதமர் மோடி, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

    டாக்காவில் இந்திய-வங்கதேச வெளியுறவுச் செயலாளர்கள் இடையே நில எல்லை வரையறை ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பரிமாறி கொள்ளப்படுவதைப் பார்வையிடும் பிரதமர் மோடி, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேசப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக, இரு நாடுகள் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க நில எல்லை வரையறை ஒப்பந்தம் சனிக்கிழமை நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் இரு நாடுகளிடையே 41 ஆண்டுகளாக நீடித்து வந்த எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை வங்கதேசம் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மரபுகளுக்கு மாறாக வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, தலைநகர் டாக்கா விமான நிலையத்துக்கே நேரில் வந்து மோடியை வரவேற்றார். அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

அங்கிருந்து டாக்காவின் வடமேற்கில் 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சவார் நகருக்குச் சென்றார். அங்குள்ள தேசிய போர் வீரர்கள் நினைவிடத்துக்குச் சென்ற பிரதமர் மோடி, பாகிஸ்தானுடனான வங்கதேச விடுதலைப் போரில் மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

போர் நினைவகத்தில் அவர் மலர்வளையம் வைத்தபோது, வங்கதேச ராணுவ வீரர்கள் அந்நாட்டு தேசியக்கொடியை ஏற்றி, அதை அரைக்கம்பத்தில் பறக்கச் செய்தனர். பின்னர் போர் நினைவக வளாகத்தில் மரக்கன்றை நட்ட மோடி, அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில் கையொப்பமிட்டார்.

அப்போது வங்கதேச நிதியமைச்சர் ஏ.எம்.ஏ.முஹித், வர்த்தகத் துறை அமைச்சர் தோஃபைல் அகமது உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் அதிகாரிகளும் உடனிருந்தனர்.

பின்னர் வங்கதேச நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடத்துக்குச் சென்ற மோடி, அங்கு 20 நிமிடங்கள் இருந்தார். “வங்கபந்து’ என்று போற்றப்படும் முஜிபுர் ரஹ்மானுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது உடைமைகளைப் பார்வையிட்டார். அப்போது, முஜிபுர் ரஹ்மானின் பேரன் ஷேக் ரிஸ்வான் சித்திக்கி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வங்கதேசப் பிரதமராக இருந்த முஜிபுர் ரஹ்மான் கடந்த 1975, ஆகஸ்ட் 15ஆம் தேதி கொல்லப்பட்டார். அதுவரை அவர் வாழ்ந்து வந்த 3 மாடி இல்லம் தற்போது அவரது நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது. முஜிபுர் ரஹ்மானின் மூத்த மகளான ஷேக் ஹசீனா தற்போது வங்கதேசப் பிரதமராகப் பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

எல்லை வரையறை ஆவணங்கள் பரிமாற்றம்: இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவும் சந்தித்து, இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது, ஆந்திரப் பிரதேசத்தின் வெங்கடகிரியில் காமதேனு, கல்பவிருட்ச மரம் போன்ற ஓவியங்களுடன் ஜம்தானி முறையில் கைத்தறி மூலம் நெய்யப்பட்ட சால்வையை ஹசீனாவுக்கு மோடி பரிசளித்தார்.

அதைத் தொடர்ந்து, இரு நாடுகள் இடையே 41 ஆண்டுகளாக நீடித்து வரும் நில எல்லைத் தகராறை முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலான ஒப்பந்த ஆவணங்கள் இரு தலைவர்கள் முன்னிலையில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இந்திய நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நில எல்லை வரையறை ஒப்பந்த மசோதா, இதேபோல் வங்கதேச நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்த மசோதா ஆகியவை தொடர்பான ஆவணங்களே அவை. இந்த ஆவணப் பரிமாற்றத்தின்போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் உடன் இருந்தார்.

இது தொடர்பாக மோடி, சுட்டுரை (டுவிட்டர்) வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “இந்த நில எல்லை வரையறை ஒப்பந்த ஆவணங்களின் பரிமாற்றம் மூலம் வரலாறு படைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா-வங்கதேசம் இடையே 162 பகுதிகளைப் பரிமாற்றம் செய்து கொள்வதற்காக கடந்த 1974இல் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன்படி, இந்தியாவுக்குள் உள்ள வங்கதேசத்துக்குச் சொந்தமான 51 பகுதிகளை இந்தியா வைத்துக் கொண்டு, பதிலுக்கு, வங்கதேசத்துக்குள் உள்ள 111 இந்தியப் பகுதிகளை அந்நாட்டுக்கு விட்டுக் கொடுக்கும். இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு இரு நாட்டுப் பிரதமர்கள் முன்னிலையில் தற்போது நடைபெற்றுள்ள ஆவணங்களின் பரிமாற்றம் வழிவகுக்கும்.

22 ஒப்பந்தங்கள் கையெழுத்து: இதனிடையே, மோடி, ஹசீனா இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையில் கடல்சார் பாதுகாப்பு, ஆள்கடத்தல் மற்றும் இந்திய கள்ள ரூபாய் நோட்டு கடத்தல் ஆகியவற்றைத் தடுப்பது உள்பட 22 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அதைத் தொடர்ந்து இரு தலைவர்களும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது மோடி கூறுகையில், “”வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தில் எனது வங்கதேசப் பயணம் அமைந்துள்ளது. சுதந்திரம் பெற்றது முதல் நீடித்து வந்த பிரச்னையை நாம் தீர்த்துள்ளோம். இதன் மூலம் நமது எல்லைகள் மேலும் பாதுகாப்பாக மாறுவதோடு மக்களின் வாழ்க்கையும் ஸ்திரமாகும்.

வங்கதேசத்துடன் தீஸ்தா மற்றும் ஃபேனி நதி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பான பிரச்னைகளும் இந்திய மாநில அரசுகளுடன் ஆதரவுடன் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்” என்றார்.

ஹசீனா செய்தியாளர்களிடம் கூறுகையில், “”பயங்கரவாதத்தை முற்றிலும் சகித்துக் கொள்ளாத அணுகுமுறையை வங்கதேசம் கடைப்பிடிக்கும்” என்று தெரிவித்தார்.

இந்தியாவுக்கு என்ன பயன்?

இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதன் மூலம் இந்தியாவுக்கு 500 ஏக்கர் நிலம் கிடைக்கும். வங்கதேசத்துக்கு 10,000 ஏக்கர் நிலம் கிடைக்கும். அதேநேரத்தில், இரு நாட்டு எல்லைப் பகுதியில் வசிக்கும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எந்த நாட்டுக் குடிமக்கள்? என்ற கேள்விக்கு விடை கிடைக்கும். அத்துடன், ஊடுருவல், எல்லைப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மொத்தம் 4,096 கி.மீ. நீளம் கொண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்த இரு நாடுகளுக்கும் இந்த விவகாரம், இருதரப்பு உறவில் பெரும் பிரச்னையாக இருந்து வந்தது.

வங்கதேசத்துக்கு ரூ.12,000 கோடி கடனுதவி

டாக்காவில் ஹசீனாவுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வங்கதேசத்துக்கு ரூ.12,821 கோடி கடன் வழங்கப்படும் என்று மோடி அறிவித்தார். ஏற்கெனவே அளிப்பதாக இந்தியா அறிவித்திருந்த ரூ.5,400 கோடி கடனும் உடனே வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஹசீனா கூறுகையில் “”வங்கதேசம்-இந்தியா இடையே அதிகரித்து வரும் வர்த்தகப் பற்றாக்குறையை சரிசெய்ய 2 சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இப்பிரச்னையைத் தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதாக மோடி வாக்குறுதி அளித்துள்ளார்” என்றார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் உடனிருந்தார்.

-http://www.dinamani.com

TAGS: