கிரானைட் முறைகேடு: சகாயம் ஐ.ஏ.எஸ் முன்பு ஆஜராகி ஆதாரங்களை அடுக்கிய டிராபிக் ராமசாமி…

கிரானைட் முறைகேடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, விசாரணை அதிகாரி சகாயம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் நடந்த கிரானைட் மற்றும் மணல் கொள்ளைகளை முழுமையாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் ஊழல் அரசியல் வாதிகள்-அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சகாயத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற பல ஆயிரம் கோடி ரூபாய் கிரானைட் முறைகேடு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்தக் குழுவின் இறுதி கட்ட விசாரணை தீவிரமடைந்துள்ளது.

Traffic Ramasamy appears before Sagayam probe committee

கிரானைட் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 13-ம் கட்ட விசாரணையை முடிந்துள்ள ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இறுதி கட்ட விசாரணை கடந்த திங்கள் கிழமை தொடங்கினார். இந்த விசாரணைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மனுதாரர் என்ற முறையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதன்படி மதுரையில் உள்ள முகாம் அலுவலகத்தில் டிராபிக் ராமசாமி இன்று, சகாயம் முன்பு ஆஜராகி கிரானைட் முறைகேடுகள் குறித்து விளக்க மனு அளித்தார். சுமார் ஒரு மணி நேரம் அவர், பல்வேறு விளக்கங்களை சகாயத்திடம் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிராபிக் ராமசாமி, கிரானைட் முறைகேடுகள் குறித்து இறுதி அறிக்கை தயார் செய்யும் பணியில் சகாயம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மனுதாரர் என்ற முறையில் எனக்கும் சம்மன் அனுப்பியிருந்தார். அதைத்தொடர்ந்து இன்று ஆஜராகி கிரானைட் முறைகேடுகள் மற்றும் மணல் கொள்ளை தொடர்பாக விளக்கம் அளித்துள்ளேன்.

கிரானைட் முறைகேடுகள் மதுரை மாவட்டத்தோடு நின்று விடாமல் உயர்நீதிமன்றத்தை அணுகி நெல்லை, தூத்துக்குடி, கடலூர், வேலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் நடந்த கிரானைட் மற்றும் மணல் கொள்ளைகளை முழுமையாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் மூலம் ஊழல் அரசியல் வாதிகள்-அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சகாயத்திடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்று கூறினார்.

சகாயம் அளிக்கும் அறிக்கையின் மூலம் தமிழ்நாட்டில் கிரானைட் மற்றும் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார். மேலும் அவர், நான் 120 ஆண்டுகள் வரை வாழ்வேன். இறுதி மூச்சு உள்ளவரை ஊழல் கட்சிகளை அழிக்கும் பணியில் ஈடுபடுவேன் என்றும் கூறினார்.

-http://tamil.oneindia.com

TAGS: