வருங்காலத்தில் இந்தியாவில் கோடை கொடூரமாக இருக்கும்: பகீர் ஆய்வு முடிவு

india_002கோடை வெயிலின் தாக்கத்தை தாங்காமல் இந்த ஆண்டு பல்வேறு மாநிலங்களில் 2 ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் வரும் ஆண்டுகளில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த ஆண்டு கோடை காலத்தில் 2 ஆயிரத்து 300 பேர் வெயிலின் உக்கிரத்தை தாங்க முடியாமல் பலியாகினர். இந்நிலையில் மும்பையில் உள்ள ஐஐடியில் இனி வரும் காலத்தில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கும் என்று ஆய்வு நடத்தப்பட்டது.

எதிர்காலத்தில் தென்னிந்தியாவில் அனல் காற்று அதிகமாக இருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என ஐஐடி மும்பையில் சிவில் என்ஜினியரிங் பிரிவு துணை பேராசிரியரும், ஆய்வை நடத்தியவர்களில் ஒருவருமான சுபிமால் கோஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் எதிர்காலத்தில் கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

உலகம் வெப்பயமாகி வருவதால் அனல் காற்றின் தாக்கம் அதிகரிக்கும் என்று அண்மையில் நடத்தப்பட்ட பிற ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. 20வது நூற்றாண்டு துவங்கியதில் இருந்து உலகின் வெப்பம் 0.9 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது.

 

1906ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டு வரை உலக அளவில் மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை 0.74 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது என காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு அனல் காற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதை காலநிலை மாற்றத்துடன் நேரடியாக ஒப்பிட முடியாது. ஆனால் உலக வெப்பமயமாவதின் மோசமான விளைவுகளின் அறிகுறியாக இந்த அனல் காற்றை எடுத்துக் கொள்ளலாம் என்று கோஷ் கூறியுள்ளார்.

 

tamil.oneindia.com

TAGS: