பிரதமர் நரேந்திர மோடியின் பெருமுயற்சியின் பலனாக முதலாவது சர்வதேச யோகா தினம் வரும் 21-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் அன்றைய தினம் மாபெரும் யோகாசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பேசும் போது, யோகாவின் பெருமைகள் மற்றும் பயன்பற்றி குறிப்பிட்டு, சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21–ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது.
அந்த அறிவிப்பின்படி, வருகிற 21–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, நியூ யார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தின் சார்பில் ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூன், ஐ.நா. பொதுச்சபை தலைவர் சாம் குட்டேசா உள்ளிட்டோர் முன்னிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தலைமையில் மாபெரும் யோகாசன நிகழ்ச்சி நடத்த சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
பல்லாயிரம் அமெரிக்கர்கள் கலந்துகொள்ளும் இந்த யோகாசன நிகழ்ச்சியை அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் பிரமாண்ட திரைகளை கொண்ட டி.வி.க்கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியின்போது, ‘வாழும் கலை’ இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் நடத்தும் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.
மேலும், அமெரிக்காவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களிலும் தனித்தனியாக பல்வேறு கூட்டு யோகாசன நிகழ்ச்சிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
-http://www.maalaimalar.com