வங்கதேசப் பிரிவினையில் இந்தியாவின் பங்கை வெளிப்படுத்த நடவடிக்கை: பாகிஸ்தான் உறுதி

india pakistanபாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தைப் பிரித்ததில் இந்தியாவின் பங்கையும், பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தலையும் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் அலுவலக ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை பேசியதாவது:

பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு அமைந்துள்ளது. மேலும், பயங்கரவாதத்தைத் தூண்டுவதன் மூலம் இந்தியாவுக்கு பாகிஸ்தான் தொல்லை கொடுக்கிறது என மோடி பேசியிருப்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பாகிஸ்தானில் இருந்து வங்கதேசத்தைப் பிரித்ததில் இந்தியாவின் பங்கு குறித்து மோடி பேசியுள்ளார். இதன் மூலம் மற்ற நாட்டின் உள்விவகாரத்தில் தலையிட்டதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

வங்கதேசப் பிரிவினையின் போது பயங்கரவாதம் மூலம் பாகிஸ்தானின் ஸ்திரத்தன்மைக்கு இந்தியா அச்சுறுத்தல் ஏற்படுத்தியதையும், அந்த விவகாரத்தில் இந்தியாவின் உண்மையான பங்கையும் வெளிப்படுத்த பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும்.
பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே நீண்டகால நட்புறவு உள்ளது.

இந்த உறவில் கசப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மோடி பேசியுள்ளார். ஆனால், அவரது முயற்சி பலனளிக்காது.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா.வின் தீர்மானத்தை மதிக்காமல் இந்தியா செயல்பட்டு வருகிறது.

அதே நேரத்தில், ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இடம்பெற வேண்டும் என முயற்சிக்கும் இந்தியாவின் நம்பகத்தன்மையில் சந்தேகம் ஏற்படுகிறது என சர்தாஜ் அஜீஸ் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் தங்கள் நாட்டுக்கு எதிரான மோடியின் பேச்சுக்கு பாகிஸ்தானின் நாடாளுமன்ற மேலவையிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

-http://www.dinamani.com

TAGS: