மேட்டூர் அணையில் கர்நாடகா கழிவுநீர் கலப்பு: செத்து ஒதுங்கும் மீன்களால் மீனவர்கள் அதிர்ச்சி

மேட்டூர் : கர்நாடக மாநில கழிவுநீர், மேட்டூர் அணை யில் கலப்பதால், அணை நீர் மாசடைந்து, பச்சை நிறமாக மாறியுள்ளது. இதனால், அணையில் வாழும் சிறு மீன்கள், சுவாசிக்க முடியாமல், குவியல் குவியலாக இறந்து, கரை ஒதுங்குவது, மீனவர்களை அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது.

ஆண்டுதோறும்…:

சேலம் மாவட்டத்தில் உள்ள, மேட்டூர் அணை நீர்மட்டம், 120 அடி. அணையில், மீன்வளத்துறை சார்பில், ஆண்டுதோறும், 25 லட்சம் முதல், 30 லட்சம், ‘கட்லா, மிர்கால், ரோகு’ ஆகிய மீன் குஞ்சுகள் விட்டு வளர்க்கப்படுகின்றன.அணையில், மீன்வளத்துறை உரிமம் பெற்று, 2,000 மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர்.

சராசரியாக, தினமும், ஒரு டன் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இந்நிலையில், பெங்களூருவில் இருந்து, தினமும், 59.3 கோடி லிட்டர் கழிவுநீர், அர்காவதி ஆற்றின் மூலமாக, காவிரியாற்றில் கலக்கிறது. காவிரியாற்றில் கலக்கும் கழிவுநீர், நேராக, மேட்டூர் அணைக்கு வருகிறது.
இந்த கழிவுநீர், பச்சை நிறத்தில், தண்ணீருடன் கலக்காமல், துர்நாற்றத்துடன், மேட்டூர் கரையோர நீர்பரப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது.அணையின், ஆழமான நீர்பரப்பு பகுதியில், பெரிய மீன்களும், கரையோர நீர்பரப்பு பகுதியில், சிறு மீன்களும் வசிக்கின்றன.

கழிவுநீர் கலப்பதால், கரையோரம் வசிக்கும், ‘மச்ச மீன், பட்டை மீன்’ உள்ளிட்ட சிறு மீன்கள் மற்றும் புதிதாக உற்பத்தியாகும் மீன் குஞ்சுகள் ஆகியவை, சுவாசிக்க முடியாமல், டன் கணக்கில் செத்து கரை ஒதுங்குகின்றன.

சிறு மீன்கள்…: அணை மீனவர்கள் கூறியதாவது:கர்நாடக மாநில கழிவுநீர், மேட்டூர் அணையில் தேங்கி நிற்பதே, சிறு மீன்கள் இறந்து மிதப்பதற்கு காரணம். மேலும், கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள், அணை நீரையே வடிகட்டி குடிப்பதற்கு பயன்படுத்தினர். அணை நீர் பச்சை நிறத்துடன் துர்நாற்றம் வீசுவதால், வடிகட்டி கூட குடிக்க முடியவில்லை.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

குடிக்க கூட தண்ணீர் கிடைக்காது!

தண்ணீரில், 3 மி.கி., அளவில் தான், பி.ஓ.டி., எனப்படும், ‘பயோ ஆக்சிஜன் டிமான்ட்’ இருக்க வேண்டும். கழிவுநீர் கலந்த காவிரியாற்றில், 29 மி.கி., என்ற அளவில் பி.ஓ.டி., உள்ளது என, ஆய்வு செய்த மாசு கட்டுப்பாடு வாரியம், தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.இந்த கழிவுநீர் தேங்குவதால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, மீன்கள் இறக்கின்றன. காவிரியில், கர்நாடகா கழிவுநீர் கலப்பதற்கு, தடை விதிக்கக் கோரி, தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த போதிலும், கழிவுநீர் கலப்பதை, குறுகிய காலத்தில் தடுக்காவிடில், மேட்டூர் அணை மீனவர்கள் வாழ்வாதாரம் மட்டுமின்றி, மேட்டூர் அணை குடிநீரை நம்பியுள்ள, டெல்டா மாவட்ட மக்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.

-http://www.dinamalar.com

TAGS: