கர்நாடக கழிவு நீர் கலப்பு… மேட்டூர் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்!

மேட்டூர்: கர்நாடகத்தின் கழிவு நீர் காவிரியில் கலப்பதால், காவிரி நீரே விஷமாகியுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் மீன்கள் செத்து மிதக்க ஆரம்பித்துள்ளன.

மேட்டூர் அணையின் உச்ச நீர்மட்டம் 120 அடியாகும். இந்த அணையில் தற்போது 74.5 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

deadfish

அணையில் மீன்வளத்துறை சார்பில் ஆண்டுதோறும் 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை கட்லா, ரோகு, மிர்கால் ரக மீன் குஞ்சுகள் விட்டு வளர்க்கப்படுகின்றன. இந்த அணையில், மீன்வளத்துறை உரிமம் பெற்று 2 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர்.

மேட்டூர் அணையின் ஆழமான நீர்பரப்பு பகுதியில் பெரிய மீன்களும், கரையோர நீர்பரப்பு பகுதியில் சிறிய அளவிலான மீன்களும் உள்ளன. இந்நிலையில் மேட்டூர் அணை நீர்த்தேக்க பகுதியின் கரையோர பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அரஞ்சான், மஞ்சதட்டை போன்ற மீன் வகைகள் செத்து மிதக்கின்றன.

இதனால் கரையோர பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அணை தண்ணீரில் கழிவுநீர் அதிகம் கலப்பதால் போதுமான ஆக்சிஜன் இன்றி மூச்சு திணறல் காரணமாக இந்த மீன்கள் செத்து மிதப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மேட்டூர் அணையின் மீன்வளம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதை நம்பியுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் இருந்து கழிவுநீர் காவிரி ஆற்றில் கலப்பதால் எண்ணெய் பிசுபிசுப்புடன் பச்சை, பசேலென தண்ணீர் நிறம்மாறி உள்ளதாகவும், ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று மீன்பிடிக்க செல்லும் போது, வீட்டிலிருந்து குடிக்க தண்ணீர் எடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பலர் மீன்பிடித் தொழிலையே கைவிட்டுவிட்டு, வேறு தொழிலுக்கு மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: