மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக நகரும் சிகிச்சைப் பிரிவு வாகனங்கள்

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக அவர்களது இல்லங்களுக்கு அருகே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் நகரும் சிகிச்சைப் பிரிவு வாகனங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாவட்டத் தலைநகரங்களில் 6 வயது வரை உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பயன்பெறும் குழந்தைகளுக்கும் அவர்களது துணையாளர்களுக்கும் போக்குவரத்து பயணச் சலுகை வழங்கப்பட்டாலும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இம்மையங்களுக்கு தொடர்ந்து வருவதில் சிரமங்கள் உள்ளதால், இம்மையங்களின் முழு பயனையும் அவர்களால் பெற இயலவில்லை. எனவே, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென 32 நகரும் சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா  அறிவித்திருந்தார்.

அதன்படி, அனைத்து கிராமம் மற்றும் நகர்ப் பகுதிகளில் உள்ள மாற்றுத் திறனாளி குழந்தைகள் பயன்பெறும் பொருட்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் வாகனங்கள் மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் இருப்பிடத்திற்கே சென்று சிகிச்சை அளித்திடும் வகையில் 4 கோடியே 49 லட்சம் ரூபாய் செலவிலான 31 நகரும் சிகிச்சைப் பிரிவு வாகனங்களின் சேவையினை துவக்கி வைக்கும் அடையாளமாக 2 ஓட்டுநர்களுக்கு வாகனத்தின் சாவிகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

 நகரும் சிகிச்சைப் பிரிவு வாகனங்களில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்குத் தேவைப்படுகின்ற பிசியோதெரபி சாதனங்களைக் கொண்டு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பணியாற்றும் முடநீக்குவல்லுநர்கள் மற்றும் பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர்கள் மாற்று திறனாளிக் குழந்தைகளின் இருப்பிடங்களுக்கே சென்று சிகிச்சை அளிப்பார்கள். இந்த சிறப்பு வாகனங்களில், இயன்முறை சிகிச்சைக் கருவிகளோடு செயல் திறன் பயிற்சி, பேச்சுப் பயிற்சி, பிறந்த குழந்தைகளை பரிசோதனை செய்தல், ஆரம்ப நிலையில் குறைகளைக் கண்டறிதல், உதவி உபகரணங்களுக்கான மதிப்பீடு செய்தல், பயிற்சி அளித்தல், விளையாட்டு  முறையில் சிகிச்சை அளித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ளும் அளவிற்கு வாகனத்தின் உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும்,  இவ்வாகனங்களின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள், குறுந்தகடுகள்,  தகவல் கையேடுகள் போன்றவை பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.

-http://www.dinamani.com

TAGS: