1,250 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னரின் படைத்தளம் கண்டுபிடிப்பு!

nellai_pandiya_001திருநெல்வேலி அருகே 1,250 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னரின் படைத்தளம் தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியிலிருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள உக்கிரன்கோட்டை பகுதியில் தமிழக தொல்லியல்துறையினர் கடந்த 2 மாதங்களாக அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5 இடங்களில் தலா 4 அடி ஆழம், 15 அடி நீளத்துக்கு குழிகள் தோண்டி இந்த அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த இடங்களில் பாண்டியர்களின் படைத்தளம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த அகழாய்வு திட்டத்துக்கான அகழாய்வு இயக்குநர் ஜெ.ரஞ்சித் கூறுகையில், கி.பி. 768 முதல் 815-ம் ஆண்டு வரையில் மதுரையை தலைநகராக கொண்டு பராக்கிரம வீரநாராயணன் என்ற உக்கிரபாண்டியன் ஆட்சி செய்திருக்கிறார்.

அவரது ஆளுகைக்கு உட்பட்டு திருநெல்வேலி உள்பட தென்பகுதிகள் இருந்துள்ளன.

இந்த பகுதிகளை கண்காணிக்கவும் படைகளை அனுப்பவும் படைத்தளபதிகள், படைக் கலன்கள், படைவீரர்கள் தங்கியிருக்க உக்கிரன் கோட்டையில் படைத்தளம் இருந்திருக்கிறது.

இங்கு படைத்தளத்துடன் கோட்டை இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

சுடுமண் பொம்மைகள், சங்கு கண்ணாடி பொருட்கள், தளஓடுகள், சிவன்கோயில் கட்டுமானம், நந்திசிலைகள், உடைந்த பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆயுதங்கள் செய்வதற்காக உலோகங்களை உருக்க இந்த பானைகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

இதனால் இங்கு ஆயுத சாலையும் இருந்திருக்க வாய்ப்புள்ளது. இந்த அகழாய்வின் முடிவில் இங்கு கிடைத்த பொருட்களை மக்கள் பார்வையிட காட்சிப்படுத்தவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: