தமிழக கூலித் தொழிலாளர்கள் 1000 பேரை பிடிக்க ஆந்திர போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

semmaramதிருமலை: திருப்பதி அருகே சேஷாசல வனப்பகுதியில் பதுங்கி உள்ள தமிழக கூலித் தொழிலாளர்கள் 1000 பேரை பிடிக்க, ஆந்திர போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பதி அருகேயுள்ள சேஷாசல வனப்பகுதியில் செம்மரங்கள் அதிகளவில் உள்ளன. இவற்றை கடத்தல் கும்பல் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி வருகின்றனர். இதை தடுக்க ஆந்திர மாநில செம்மர கடத்தல் தடுப்பு பிரிவின் டிஐஜி காந்தாராவ் தலைமையில் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரம் கடத்த முயன்றதாக, தமிழக கூலித் தொழிலாளர்கள் 20 பேரை ஆந்திர மாநில போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்துக்கு பிறகு ஆந்திராவுக்கு செம்மரம் வெட்ட வருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது.

இந்நிலையில் மீண்டும் சேஷாசலம் வனப்பகுதியில், செம்மரம் வெட்டவும், ஏற்கனவே வெட்டப்பட்ட செம்மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில் பதுக்கி வைத்திருப்பதால், அவற்றை எடுப்பதற்காகவும், வனப்பகுதியில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் என 300க்கும் மேற்பட்டோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

-http://www.dinakaran.com

TAGS: