தொழிலாளர் சட்டங்களில் திருத்தம்: மத்திய அரசு திட்டம்

workerதொழிலாளர் நலச் சட்டத்தில் மிகப்பெரிய அளவில் சீர்திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இதுகுறித்து தில்லியில் மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, வியாழக்கிழமை கூறியதாவது:

தொழிற்சங்கங்கள் சட்டம், தொழில் தகராறு சட்டம், தொழில் துறை வேலைவாய்ப்பு நிலையாணைகள் சட்டம் ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்து புதிய வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா குறித்து விரிவாக விவாதிக்கப்பட வேண்டியிருப்பதால், அடுத்த மாதம் தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்படாது என்றார் பண்டாரு தத்தாத்ரேயா.

மத்திய அரசின் புதிய வரைவு மசோதாவின்படி, 300 தொழிலாளர்கள் வரை பணியாற்றும் தொழிற்சாலையில், அரசின் அனுமதியின்றி தொழிலாளர்களை ஆலை நிர்வாகம் பணி நீக்கம் செய்யலாம். தற்போதைய சட்டத்தின்படி, 100 தொழிலாளர்களுக்கு அதிகமானோர் பணியாற்றும் தொழிற்சாலைகள், தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ய அரசின் முன் அனுமதி பெற வேண்டும்.

எனினும், ஒரு தொழிற்சாலை மூடப்பட்டாலோ, தொழிலாளர் பணி நீக்கம் செய்யப்பட்டாலோ, 3 மாதங்களுக்கு முன்பு தொழிலாளர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இது, தற்போது ஒரு மாதமாக உள்ளது.

மேலும், புதிய மசோதாவின்படி, பணி நீக்கம் செய்யப்படும் தொழிலாளர்களுக்கு 45 நாள் ஊதியம் வழங்கப்பட வேண்டும். தற்போது, 15 நாள் ஊதியம் வழங்கப்படுகிறது. இதனிடையே, புதிய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, செப்டம்பர் 2-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

-http://www.dinamani.com

TAGS: